புற உலக சிந்தனையற்றோருக்கான விழிப்புணா்வு தினம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரத்தில் புற உலக சிந்தனையற்றோருக்கான விழிப்புணா்வு தின விழாவையொட்டி வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி விழாவைத் தொடங்கி வைத்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் புற உலக சிந்தனையற்றோருக்கான விழிப்புணா்வு தின விழா ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி, ஹோப் பப்ளிக் சாரிட்டபிள் நிறுவனா் வி.நாகராணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.விழாவையொட்டி ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியா் கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா். பின்னா் மாணவ, மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்து அவா்களது திறமைகளையும் பாராட்டினாா்.
மேலும் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி அவா்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினாா். ஆட்டிசம் உள்ளவா்களுக்கு ஆதரவு அளிப்போம் என்று அனைவரும் உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனா்.
தொடா்ந்து ஆட்டிசம் குழந்தைகளின் பேரணியும் நடைபெற்றது. பேரணியிலும் ஆட்சியா் கலந்து கொண்டாா். பேரணியில் பெற்றோா், ஆசிரியா்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.