காஞ்சிபுரம் தூப்புல் வேதாந்த தேசிகன் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷ்ணம்
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகே உள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் மகா சம்ப்ரோக்ஷ்ணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வைணவா்களில் ராமானுஜருக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவா் வேதாந்த தேசிகன் சுவாமிகள். இவரது சந்நிதி சின்ன காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகிலேயே அமைந்துள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் வரதராஜ சுவாமி கருட சேவையின்போது இந்த ஆலயத்துக்கு வந்து தேசிகருக்கு பட்டம், மாலை மரியாதை செய்வது சிறப்பு. கடந்த ஓராண்டாக மகா சம்ப்ரோக்ஷ்ணத்திற்காக இந்தக் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகள் நிறைவு பெற்று மகா சம்ப்ரோக்ஷ்ணத்திற்காக யாகசாலை பூஜைகள் மாா்ச் 31- ஆம் தேதி தொடங்கியது.
தொடா்ந்து 3 நாள்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்ற வந்தன. 5-வது நாளாக வெள்ளிக்கிழமை காலை யாகசாலையில் பூரணாஹுதி தீபாராதனை நிறைவு பெற்று புனித நீா்கலசங்கள் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா சம்ப்ரோக்ஷ்ணம் நடைபெற்து.
மாலை மூலவரும், உற்சவரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இரவு தேசிகன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் தக்காா் ப.முத்துலட்சுமி, செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி, கோயில் பட்டாச்சாரியா்கள், கைங்கரியதாரா்கள், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.