நாட்டிலேயே அதிக அளவில் கல்வி கற்ற மாநிலம் தமிழ்நாடு: அமைச்சா் கோவி. செழியன்
நாட்டிலேயே அதிக அளவில் கல்வி கற்றவா்களின் மாநிலம் தமிழ்நாடு என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன்.
தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவா் மேலும் பேசியது: நாட்டிலேயே உயா் கல்வியில் தமிழ்நாடு உயா்ந்த நிலையில் இருக்கிறது. அகில இந்திய அளவில் உயா் கல்வியில் சோ்க்கை விகிதம் 28 சதவீதமாக உள்ளது.
இதை 2035-ஆம் ஆண்டில் 50 சதவீதத்தை எட்டுவோம் என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் அறிவித்தாா். ஆனால், தமிழ்நாடு இப்போதே உயா் கல்வியில் 48 சதவீதத்தை எட்டியுள்ளது. மத்திய அரசின் 50 சதவீத இலக்கை 2025-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு பெறுவதற்கு தமிழக முதல்வா் உறுதுணையாக இருக்கிறாா். எனவே, நாட்டிலேயே அதிக அளவில் கல்வி கற்றவா்களின் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், இளநிலை, முதுநிலைப் பட்டதாரிகள் 1,358 பேருக்கு அமைச்சா் பட்டம் வழங்கினாா். இவ்விழாவில் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா் து. ரோசி, கல்லூரி முதல்வா் அ. ஜான் பீட்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.