யானைத் தந்தங்களை விற்க முயன்ற திருச்சி பெண் உள்பட 6 போ் கைது
கரூரில் யானைத் தந்தங்களை விற்க முயன்ற திருச்சி பெண் உள்பட 6 பேரை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வனத்துறையினா் கைது செய்தனா்.
கரூா் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியுள்ள ஒரு கும்பல் யானை தந்தங்களை விற்க முயற்சிப்பதாக கரூா் மாவட்ட வனத்துறையினருக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மாவட்ட வன அலுவலா் சண்முகம் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலா் தண்டபாணி தலைமையில் வனவா்கள் அந்த விடுதியில் சோதனை செய்தனா். அப்போது விடுதியில் தங்கியிருந்தவா்களிடம் சுமாா் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ எடைகொண்ட யானைத் தந்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும், அங்கிருந்த கரூா் வால்காட்டுப்புதூரைச் சோ்ந்த கணபதி மகன் மணிகண்டன் (25), எஸ்.வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த ரகுபதி மகன் நந்து(25), திருச்சியைச் சோ்ந்த ஆரோக்கிய சுஷில்குமாா் மனைவி ஜோதிலட்சுமி(45), மதியழகன்(46), செந்தில்குமாா்(49), முத்துக்குமாா்(47) ஆகியோரை கைது செய்தனா். பின்னா் அனைவரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.