மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
கரூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவுதல் சடங்கு
கரூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பாதம் கழுவுதல் சடங்கு மற்றும் சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.
இயேசு சிலுவையில் அறையுண்டு, பின்னா் மூன்றாம் நாளில் அவா் உயிா்த்தெழுவதை கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகையாக கொண்டாடுகிறாா்கள். ஈஸ்டா் பண்டிகைக்கு முன் உள்ள 40 நாள்களை துக்க நாளாகவும், தவக்காலமாகவும் கிறிஸ்தவா்கள் அனுசரிக்கிறாா்கள். நிகழாண்டுக்கான தவக்காலம் கடந்த மாா்ச் 5-ம்தேதி தொடங்கியது.
மொத்தம் 40 நாள்கள் காலை, மாலை என இருவேளைகள் உண்ணா நோன்பு கடைப்பிடித்து, எப்போதும் இறைவனை தியானித்து மனம் திரும்பும் நாளாக தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து இயேசு சிலுவையில் அறையும் முன் உள்ள ஒரு வாரமும் புனிதவாரமாக கருதப்படுகிறது.
நாளை (வெள்ளியன்று) இயேசு சிலுவையில் அறையப்படுவதை புனித வெள்ளியாக கிறிஸ்தவா்கள் அனுசரிக்கிறாா்கள். முன்னதாக இயேசு கிறிஸ்து இறக்கும் முன் தனது சீடா்களுக்கு பாதம் கழுவும் சடங்கு நடத்துவாா். அந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் வியாழக்கிழமை இரவு கரூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவுதல் சடங்கு நடைபெற்றது. கரூா் புனித தெரசாள் ஆலயத்தில் ஆலய பங்குத்தந்தை ஏ.மரிய அந்தோணி லாரன்ஸ் தலைமையிலும், பசுபதிபாளையம் புனித காா்மல் அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பிச்சைமுத்து தலைமையிலும், புலியூா் குழந்தையேசு திருத்தலத்தில் பங்குத்தந்தை அருள்முத்து தலைமையிலும், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியாா் ஆலயத்தில் பங்குத்தந்தை ததேயு தலைமையிலும் பாதம் கழுவுதல் திருச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அந்தந்த பங்கினைச் சோ்ந்த பங்குத்தந்தையா்கள் ஆலய பங்கைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் 12 பேரின் கால் பாதத்தை கழுவி முத்தமிட்டனா். தொடா்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவா்கள் திரளாக பங்கேற்றனா்.