ஒரே நேரத்தில் 7 படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தொடர்ந்து புதுப் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
தமிழ் சினிமாவில் தலைமுறை இடைவெளிகளில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மான், அனிருத் என இம்மூவரும் தங்களுக்கான இடங்களைப் பிடித்தவர்கள். இதில், இளையராஜாவும் ரஹ்மானும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டாலும் பெரும்பாலான 2கே தலைமுறையின் தேர்வு அனிருத்தாகவே இருக்கிறது.
பின்னணி இசை, பாடல் என அதிரும் இசைகளால் அனிருத் தவிர்க்க முடியாதவராகே பார்க்கப்படுகிறார். இந்தியளவில் பெரிய நடிகர்களுக்கு இசையமைப்பதுடன் உலகளவில் இசை நிகழ்ச்சிகளையும் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறார்.
இந்த வரிசையில் தற்போது பேசப்படும் பெயர் சாய் அபயங்கர். ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ ஆல்பம் பாடல்களால் இசையமைப்பாளராக, பாடகராகக் கவனிக்கப்பட்ட சாய் அபயங்கர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் பென்ஸ், சூர்யாவின் கருப்பு, பிரதீப் ரங்கநாதனின் டூட், மலையாளத்தில் பல்டி, கார்த்தியின் 29-வது படமான மார்ஷல், சிவகார்த்திகேயனின் 24-வது படம் என ஒரே நேரத்தில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இதுபோக, இந்திய சினிமாவின் பிரம்மாண்ட திரைப்படமான அட்லி - அல்லு அர்ஜுன் படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான் என்கின்றனர்.
தன் இசையமைப்பில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத நிலையில், தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் சாய் அபயங்கர்!