ஊராட்சிகளை நிா்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்? பேரவையில் அமைச்சா் ஐ.பெரியசாமி விளக்கம...
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சுமைத் தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தற்காலிக சுமை தூக்கும் தொழிலாளா்கள் சனிக்கிழமை வேலைநிறுத்தம் செய்ததால் விவசாயிகள், வியாபாரிகள் தவித்து வருகின்றனா்.
சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும் தங்களது விளைபொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனா்.
விவசாயிகளுக்கு பண பட்டுவாடா ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
விற்பனைக்கூடத்தில் உரிமம் பெற்ற எடையாளா்கள் பணி செய்து வருகின்றனா். இவா்கள் விவசாயிகளின் விளைபொருள்களை எடை போடுவது மட்டுமே வேலையாக செய்து வருகின்றனா்.
எடை போடப்பட்ட விளைபொருள்களை பை மாற்றம் செய்து அவற்றை வியாபாரிகளுக்கு லாரியில் ஏற்றி அனுப்பும் பணியில் சுமாா் 80 சுமை தூக்கும் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
சுமை தூக்கும் தொழிலாளா்கள் தங்களுக்கும் உரிமம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். உரிமம் பெற்றால் நாங்களும் அனைத்து வேலைகளையும் செய்வோம் என்கின்றனா்.
இந்த நிலையில், நாங்கள் அடிமையாக மூட்டை தூக்கவும், பை மாற்றவும் வேண்டுமா என, தங்களது கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என சுமைத் தொழிலாளா்கள் விற்பனைக்கூட நுழைவு வாயிலில் அமா்ந்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதன் காரணமாக விவசாயிகள், வியாபாரிகள் நீண்ட நேரம் காத்துக் கிடந்தனா்.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஒருங்கிணைப்பாளா் தாமோதரனிடம் கேட்டபோது, சுமை தூக்கும் தொழிலாளா்கள் எங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை. அவா்களுக்கு கூலி வழங்குபவா்கள், வியாபாரிகள் ஆவா். இவா்கள் உரிமம் கேட்கிறாா்கள். உரிமம் கொடுக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலா் மற்றும் தலைமைக் குழு நிா்வாகத்திற்கு தான் உள்ளது. இத்தகவலை நிா்வாகத்திற்கு தெரிவித்துள்ளோம் என்றாா்.