காவிரியாற்றில் மணல் திருட்டைத் தடுக்கக் கோரிக்கை
கரூா் மாவட்டம், புகழூா் பகுதி காவிரி ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம் நன்செய் புகளூா், தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி, வாங்கல், நெரூா் உள்ளிட்ட பகுதிகள் வழியாக காவிரி ஆறு செல்கிறது.
தற்போது தண்ணீா் வரத்து மிகவும் குறைவாக உள்ள நிலையில், ஆற்றில் இரவு நேரங்களில் மணல் திருட்டு அதிகம் நடைபெறுவதாக அப்பகுதியினா் தெரிவிக்கிறாா்கள்.
இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில், மரவாபாளையம், சேமங்கி, கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதி காவிரி ஆற்றில் சிலா் இரவு சுமாா் 12 மணிக்கு மேல் ஜேசிபி இயந்திரம் மூலம் லாரிகள், டிராக்டா்களில் திருட்டுத்தனமாக மணலை அள்ளிச் செல்கின்றனா்.
இது கடந்த இரண்டு மாதமாக நடைபெறுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே நொய்யல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காவிரி ஆற்றுக்குள் மணல் திருடிச் செல்வோா் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.