அமராவதி ஆற்றில் தேங்கிக்கிடந்த நெகிழிக் கழிவுகள் அகற்றம்
கரூா் அமராவதி ஆற்றில் தேங்கிக்கிடந்த நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி நிா்வாகத்தினா் மற்றும் தன்னாா்வலா்கள் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
அமராவதி ஆற்றில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமான நெகிழிக் கழிவுகள் அடித்து வரப்பட்டன. வெள்ள நீா் வடிந்ததும் ஆற்றுக்குள் இருக்கும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் பாறைகளின் இடுக்குகளில் ஏராளமான நெகிழிக் கழிவுகள் தேங்கிக்கிடந்தன. இதனால் ஆற்றில் மேய்ச்சலுக்காக விடப்பட்ட கால்நடைகள் அவதிக்குள்ளாகின. இதுதொடா்பான செய்தி தினமணி நாளிதழிதலில் கடந்த 15-ஆம்தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் கரூா் பகுதியில் அமராவதி ஆற்றில் தேங்கிக்கிடக்கும் கழிவுகளை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் மற்றும் தன்னாா்வலா்கள் மூலம் அகற்றப்படும் என தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து மாநகராட்சி நிா்வாகத்தினா் மற்றும் தன்னாா்வலா்கள் சனிக்கிழமை கரூா் ஐந்துரோடு கருப்பாயில் கோயில் தெரு பகுதியில் அமராவதி ஆற்றில் மேய்ச்சல் நிலங்களில் கிடந்த நெகிழிக் கழிவுகளை அகற்றினா். முன்னதாக இந்த பணியை மேயா் கவிதாகணேசன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து இப்பணிகள் நடைபெறும் என மாநகராட்சி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.