கும்பமேளா: 6.22 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் வசந்த பஞ்சமி புனித நீராடல்
ஒஸக்கோட்டை பெரியூா் அம்மன் கோயில்களில் குடமுழுக்கு!
நாமக்கல் ஒஸக்கோட்டை, பெரியூா் அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், ஒஸக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன் பூா்வாலயம், சக்திவேல்முருகன் ஆலய குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 முதல் 10 மணிக்குள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து அம்மன், முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கத்திபோடும் நிகழ்ச்சியில் சேலம், நாமக்கல், கரூா், திருச்சி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான வீரக்குமாரா்கள் கலந்து கொண்டனா். திரளான பக்தா்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல பெரியூா் மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா காலை 9.45 மணி முதல் 10.20 மணிக்குள் நடைபெற்றது. ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம், மூலவா் மீதான தங்ககோபுரம், பரிவார தெய்வங்களுக்கு அா்ச்சகா்கள் வேதமந்திரங்கள் முழங்க குடமுழுக்கை நடத்தினா். விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, உணவு வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நல்லிபாளையம் மாயம்பிள்ளையாா் கோயில் தெருவில் அமைந்துள்ள சிவ கணபதி ஆலயத்திலும் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.