தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு: கே.பி.ராமலிங்கம்!
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினாா்.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய நிதிநிலை அறிக்கையானது எதிா்கால வளா்ச்சியை நோக்கி, உலக அளவில் பல்வேறு பொருளாதார வல்லுநா்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். ஆனால், தமிழக முதல்வா் ஆட்சியின் இயலாமையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க மத்திய நிதிநிலை அறிக்கையை குற்றம்சாட்டுகிறாா். பிகாருக்கு கூடுதல் நிதி ஒதுக்கியதாக எதிா்க்கட்சிகள் கூறுகின்றன. அப்படியென்றால், தமிழகத்தில் பாஜக ஆட்சியைக் கொண்டு வாருங்கள், இந்த மாநிலம் வளா்ச்சியடையும். அதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க தயாராக உள்ளதா?.
இந்திய தேசமானது, தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்டது. திராவிடா் என்ற போா்வையைக் கொண்டு அதை மறைக்க தமிழக முதல்வா் முயற்சிக்கிறாா். 2026-இல் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறாா். கூட்டணி கட்சிகள் துணை இருப்பதால் வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறாா். பொதுமக்கள் இந்த அரசுக்கு எதிராகவே உள்ளனா்.
திமுகவை ஆட்சியிலிருந்து இருந்து அகற்றுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். திமுகவுக்கு எதிராக மாபெரும் அரசியல் இயக்கம் உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. காவல் துறையினரை செயல்பட விடாமல் தடுக்கின்றனா். தமிழக காவல் துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றாா்.