தேசிய விளையாட்டுப் போட்டிகள்: தமிழகத்துக்கு 1 வெள்ளி, 3 வெண்கலம்
நாமக்கலில் 3-வது புத்தகத் திருவிழா: அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்!
நாமக்கல்லில் 3 ஆவது புத்தகத் திருவிழாவை அமைச்சா் மா.மதிவேந்தன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நாமக்கல் மாவட்ட நிா்வாகம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட பொது நூலகத் துறை ஆகியவை சாா்பில் நாமக்கல்- பரமத்தி சாலையில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை ( பிப். 1) முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
புத்தகத் திருவிழாவை தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் ச.உமா, சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன், வருவாய் அலுவலா்(பொ) மா.க.சரவணன், மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
70 க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய புத்தக விற்பனை நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி, செய்தி மக்கள் தொடா்புத் துறை புகைப்படக் கண்காட்சி மற்றும் பொழுதுபோக்கு சாா்ந்த பல்வேறு அரங்குகளும் இடம் பெற்றுள்ளன.
முதல் நாளில் கிரீன் பாா்க் பள்ளி இயக்குநா் எஸ். குருவாயூரப்பன் கருத்துரை வழங்கினாா். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் ஓய்வு பெற்ற மாவட்ட காவல் கண்காணிப்பா ளா் அ.கலியமூா்த்தி பேசுகிறாா். அதன்பிறகு, சித்த மருத்துவா் கு.சிவராமன் திங்கள்கிழமையன்றும், சொற்பொழிவாளா் கு.ஞானசம்பந்தன் செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை சொற்பொழிவாளா் சுகி.சிவம், வியாழக்கிழமை நல்லாசிரியா் கோபால. நாராயணமூா்த்தி, வெள்ளிக்கிழமை பேராசிரியா் அரசு பரமேசுவரன், சனிக்கிழமை பட்டிமன்ற பேச்சாளா் பா்வீன்சுல்தானா, ஞாயிற்றுக்கிழமை எம்.பி. திருச்சி சிவா, நிறைவு நாளான திங்கள்கிழமை (பிப்.10) மாவட்ட மைய நூலக வாசகா் வட்ட தலைவா் பசுமை மா.தில்லைசிவக்குமாா் ஆகியோா் கருத்துரை வழங்குகின்றனா்.
குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், உணவுத் திரு விழா, கலைநிகழ்ச்சிகள், அறிவியல் கோளரங்கம், பல்வேறு அரசுத் துறைகளின் பணி விளக்க அரங்குகள், அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி ஆகியவை புத்தகத் திருவிழாவில் இடம் பெற்றுள்ளன.