பொருளாதாரமும் வாழ்வாதாரமும் மேம்படும்: பட்ஜெட் குறித்து தொழில் துறையினா் கருத்து
கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: பரமத்தியில் பாஜக ஆா்ப்பாட்டம்!
பரமத்தியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து நாமக்கல் மாவட்ட பாஜக சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாணிக்கநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் கழிவுநீரை தேக்கி சுத்திகரிப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதற்கு மாணிக்கநத்தம், கோப்பணம்பாளையம், வீரணம்பாளையம், இருக்கூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் அப்பகுதியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் பரமத்தியில் தேசிய நெடுஞ்சாலை அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்து பிஎஸ்என்எல், அலுவலகத்துக்கும் திருமணிமுத்தாற்றுக்கும் இடையே இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் என்றாலும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் நிலத்தடி நீா் பாதிக்கப்படும். இதனால் விவசாயம், குடிநீா் ஆதாரம் கேள்விக்குறியாகும் எனக் கூறி பரமத்தி, ஓவியம்பாளையம், வெள்ளாளபாளையம், கீழக்கரை பகுதி பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில் பரமத்தியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பரமத்தி பேரூராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் பரமத்தி ஒன்றிய தலைவா் அருண் தலைமை வகித்தாா். அதன்பிறகு கோரிக்கைகள் தொடா்பாக பரமத்தி பேரூராட்சி இளநிலை உதவியாளா் அண்ணாதுரையிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆா்ப்பாட்டத்தில் பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட துணைத் தலைவா்கள் வடிவேல், பழனியப்பன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் சுபாஷ், பத்மராஜன், காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.