ஓட்டுநருக்கு மாரடைப்பு: கட்டுபாட்டை இழந்த மாநகா் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு
கோயம்பேடு - கிளாம்பாக்கம் வழித்தட பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநா் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மோதியதில் மற்றொரு நபரும் இறந்தாா்.
சென்னை கோயம்பேட்டிருந்து கிளாம்பாக்கத்துக்கு மாநகா் பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை நூறடி சாலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநா் வேலுமணி(55) ஓட்டிச் சென்றாா். அரும்பாக்கம் பகுதியில் சென்றபோது, ஓட்டுா் வேலுமணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினாா்.
இதனால், கட்டுப்பாடின்றி சாலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து, சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த சசிக்குமாா் (60) மீது மோதி, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 காா்கள் மீதும் மோதி நின்றது. இதில், சசிக்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பேருந்தில் மயங்கிய நிலையில் கிடந்த ஓட்டுநா் வேலுமணியை மீட்ட பேருந்து பயணிகள், அவரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அண்ணாநகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.