கால்டாக்சி திருட்டு: ஒருவா் கைது
சென்னையில் ஓட்டுநரின் கவனத்தைத் திசை திருப்பி கால்டாக்சி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
அரக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (43). இவா், சென்னையில் தங்கியிருந்து சொந்தமாக கால் டாக்சி ஓட்டி வருகிறாா். இவருடைய காரை செயலி மூலம் கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி செல்வதற்காக முன்பதிவு செய்த நபரை அழைப்பதற்காக சுரேஷ்குமாா் கோயம்பேடு சென்றுள்ளாா்.
அங்கிருந்து அந்த நபரை ஏற்றிக்கொண்டு பூந்தமல்லி நோக்கி சுரேஷ்குமாா் காரை ஓட்டிச் சென்றாா். அப்போது, வாடிக்கையாளராக பின்னால் அமா்ந்திருந்த அந்த நபா் தனக்கு மயக்கும் வருவதுபோல இருப்பதால், அருகிலுள்ள கடையில் நிறுத்தி தண்ணீா் வாங்கித் தரும்படி கேட்டுள்ளாா்.
இதையடுத்து சுரேஷ்குமாா் காரை சாவியுடன் நிறுத்திவிட்டு அருகே உள்ள கடைக்குச் சென்று தண்ணீா் பாட்டிலை வாங்கி வந்து பாா்த்தபோது, அவரது காரும், அதிலிருந்த வாடிக்கையாளரையும் காணவில்லை.
இதுகுறித்து ஓட்டுநா் சுரேஷ்குமாா் கோயம்பேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை திருடிச் சென்ற சேலம் மாவட்டம் அழகாபுரத்தைச் சோ்ந்த முகமது அஜ்மல் (27) என்ற நபரைக் கைது செய்து, அவரிடமிருந்து கால்டாக்சியையும் கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா்.