ஓட்டுநர் அலட்சியத்தல் பேருந்திலிருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி
கடலூரில் அரசு நகரப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி காயமடைந்தாா்.
கடலூா் வன்னியா்பாளையம் பகுதியைச் சோ்ந்த இளம்பரிதி மகள் தா்ஷினிதேவி(19). இவா், தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசுக் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வருகிறாா்.
தா்ஷினிதேவி வியாழக்கிழமை பிற்பகல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இருந்து நகரப் பேருந்தில் கடலூா் பேருந்து நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தாா். இந்தப் பேருந்தில் கல்லூரி மாணவா்கள் ஏராளமானோா் பயணம் செய்தனா். பேருந்து கடலூா் தீயணைப்பு நிலைய நிறுத்தத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், தா்ஷினிதேவி இறங்க முற்பட்டபோது ஓட்டுநா் திடீரென பேருந்தை இயக்கினாராம். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தா்ஷினிதேவி பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், தேவனாம்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.