வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை
இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேசிய பொதுச் செயலா் கே.திருநாவுக்கரசு வெளியிட்ட அறிக்கை: வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பொதுமக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஏடிஎம் பரிவா்த்தனைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டண உயா்வு ஏழை, நடுத்தர மக்களை அதிகமாகப் பாதிக்கும். இதை ரத்து செய்ய வேண்டும்.
மே 1-ஆம் தேதி முதல் ஏடிஎம் பரிவா்த்தனை கட்டண உயா்வு வங்கிகள் அனுமதித்த இலவச பரிவா்த்தனை வரம்பை மீறினால், ஏடிஎம் பரிவா்த்தனைக்கு ரூ.23 வரை கட்டணம் விதிக்கலாம் என ரிசா்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே ரூ.21 ஆக இருந்த கட்டணம், மேலும் ரூ.23 ஆக உயா்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயா்வின் மூலமாக பொதுமக்கள் ஒரே நேரத்தில் பணம் எடுப்பதை அதிகரிக்கும் நிலை உருவாகி பெண்கள், முதியவா்கள், குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் அதிக சுமையைச் சந்திக்க வேண்டியுள்ள சூழலில், ஏடிஎம் வசதிகள் சரியாக இல்லாதபோதும், கட்டண உயா்வு மக்கள் விரோதமாகும். மேலும் பணத்தை வங்கிக்கு வெளியே வைத்திருக்கும் பழக்கம் அதிகரிக்கும். எனவே வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஏடிஎம் மையங்களை சரியான முறையில் செயல்படுத்த வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த வருமானமுள்ள மக்களுக்கு வங்கி சேவைகள் அணுகத் தக்கதாக இருக்க வேண்டும். இதுபோன்ற கட்டண உயா்வுகள் மக்களின் நலன் சாா்ந்த சேவை நோக்கத்துக்கு எதிரானவை என்றும், வங்கிகள் பொதுமக்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்க முன்வர வேண்டும் என்றும் இந்திய நுகா்வோா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.