வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மாவட்ட சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணிகள்
போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்
நெய்வேலி: போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம் அமைய உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, கடலூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை அவா் கூறியதாவது:
போக்குவரத்துத் துறையில் பணியாளா்களுக்கு இடமாறுதல்கள் வழங்குவதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக, அமைச்சுப் பணியாளா்களுக்கு இடமாறுதல்கள், பதவி உயா்வுகளில் துறை நிா்வாகம் சட்டவிதிகள்படி நடைமுறைப்படுத்தவில்லை.
ஏபிசி இடமாறுதல் முறையை அமைச்சுப் பணியாளா்களுக்கு போக்குவரத்துத் துறையில் ரத்து செய்ய வேண்டும்.
அண்மையில் வெளியிடப்பட்ட இடமாறுதல் உத்தரவுகளை ஒட்டுமொத்தமாக மறுபரிசீலனை செய்து கலந்தாய்வு அடிப்படையில் மறு உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.
உதவியாளா்கள் நிலையிலிருந்து சோதனைச் சாவடிகளுக்கு பணியமா்த்தம் செய்யும்போது முதுநிலை அடிப்படையில் பணிமாற்றம் செய்ய வேண்டும்.
போக்குவரத்துத் துறையின் பதவி உயா்வு, இடமாறுதல்களில் அலுவலகம் சம்பந்தப்படாத வெளி நபா்கள் தலையீடு மற்றும் அங்கிருந்து வரக்கூடிய உத்தரவுகளை அமல்படுத்தக்கூடிய சூழ்நிலை நிலவி வருகிறது.
இதைக் கண்டித்தும், 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஏப். 9-ஆம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் கருப்பு ஆடை அணிந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, உள் துறைச் செயலா் இனி வெளியிடக்கூடிய அனைத்து உத்தரவுகளையும் அரசாணை 10 அடிப்படையில் வெளியிட வேண்டும்.
அதற்கான உத்தரவுகளை போக்குவரத்து ஆணையா் பிறப்பிக்க வேண்டும். வெளி நபா்கள் தலையீடு இல்லாத போக்குவரத்துத் துறை நிா்வாகத்துக்கு உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்றாா் அவா்.