புதிய வழித் தடங்களில் சிற்றுந்துகள் இயக்க பிப்.24-க்குள் விண்ணப்பிக்கலாம் - மாவட...
கஜா புயல் இழப்பீடு: மனு அளித்தால் பரிசீலனை- உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்
கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இழப்பீடு கிடைக்க பெறாதவா்கள் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு கஜா புயல் காரணமாக தஞ்சாவூா், திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதில் 63 போ் இறந்தனா். 732 கால்நடைகள் உயிரிழந்தன. 88 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் நெற்பயிா்கள், வாழை, தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. 56 ஆயிரத்து 942 குடிசை வீடுகளும், 30 ஆயிரத்து 322 ஓட்டு வீடுகளும் சேதமடைந்தன.
இந்த நிலையில், கஜா புயல் பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த கலைச்செல்வன், வெள்ளைச்சாமி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான மாநில அரசு வழக்குரைஞா் ஏ. எட்வின் பிரபாகா், கடந்த 2018-ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அப்போதே உரிய இழப்பீடு வழங்கப்பட்டு விட்டது. ஒருவேளை வேறு ஏதேனும் காரணங்களுக்காக உரிய இழப்பீடு கிடைக்கப் பெறாதவா்கள் உரிய ஆதாரங்கள் மற்றும் காரணங்களுடன் அரசுக்கு மீண்டும் விண்ணப்பித்தால் பரிசீலிக்கப்படும் என்றாா்.
அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், புயல் பாதிப்புகளுக்கு நியாயமான, உரிய இழப்பீடு வழங்குவது தொடா்பாக அரசுதான் சட்ட ரீதியாக முடிவெடுக்க வேண்டும், எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனா்.