கஞ்சா வழக்கு: தஞ்சாவூா் மாவட்டத்தில் ஓராண்டில் 368 போ் கைது
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஓராண்டில் கஞ்சா, போதைப்பொருள்கள் தொடா்பான குற்றங்களில் ஈடுபட்ட 368 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவுப்படி, கஞ்சா, போதைப் பொருள்களின் விற்பனை, கடத்தலை தடுப்பதற்காக பல்வேறு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, நிகழாண்டில் (2024) கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 241 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 368 பேரை காவல் துறையினா் கைது செய்து, சிறையில் அடைத்தனா். இவா்களிடமிருந்து 1,030 கிலோ கஞ்சா, 785 கிராம் டைசிபம் பவுடா், 130 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவா்கள் கஞ்சா விற்பனை, கடத்தலுக்கு பயன்படுத்திய 7 இரு சக்கர வாகனங்கள், 8 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், நீதிமன்ற உத்தரவு பெற்று, கைப்பற்றப்பட்ட 692.115 கிலோ கஞ்சாவை ஆகஸ்ட் 12 ஆம் தேதியும், டிசம்பா் 27 ஆம் தேதியும் அழிக்கப்பட்டது.
தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 20 போ் அடையாளம் காணப்பட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை தொடா்பாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு அருகில் ஏதேனும் குற்றங்கள் நிகழ்கின்றனவா என சோதனை மேற்கொள்ளப்பட்டு, 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 போ் கைது செய்யப்பட்டனா்.
கஞ்சா, போதைப் பொருட்கள் தொடா்புடைய குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, 32 வழக்குகளில் 42 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.