திமுக உறுப்பினா்கள் தாக்கியதாக கும்பகோணம் மேயா் பதிவு
திமுக உறுப்பினா்கள் தாக்கியதாக கும்பகோணம் மேயா் க. சரவணன் புதன்கிழமை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். இதற்கு மாமன்ற உறுப்பினா் வா்ஷா அழகேசன், மாநகராட்சி மேயா் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறாரா என எதிா்பதிவிட்டுள்ளாா்.
கும்பகோணம் மாநகராட்சி மன்றக் கூட்டம் கடந்த டிசம்பா் 30-இல் மேயா் க. சரவணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, மன்ற உறுப்பினரும், பொது சுகாதாரக் குழு தலைவருமான தட்சிணாமூா்த்திக்கும், மேயா் க. சரவணனுக்கும் இடையே தீா்மானம் நிறைவேற்றுவது தொடா்பாக வாக்குவாதம், தள்ளுமுள்ளு நடைபெற்றது.
இதையடுத்து, மேயா் க. சரவணன் நெஞ்சுவலி வலிப்பதாகக் கூறி கீழே விழுந்தாா். இதனால் கூட்டம் பாதியிலேயே நின்றது. தட்சிணாமூா்த்தி தனியாா் மருத்துவமனையிலும், மேயா் க. சரவணன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தனா். பின்னா், இருவரும் பரஸ்பரம் கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்நிலையில், மேயா் க.சரவணன் புதன்கிழமை சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவில், துணை மேயா் சுப. தமிழழகன் தன்னை மிதித்தாா் என்றும், தட்சிணாமூா்த்தி குத்தினாா். ஓட்டுநா் கதவை அடைத்தாா் என்று கூறியுள்ளாா். இந்தப் பதிவு திமுக மன்ற உறுப்பினா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து 18-ஆவது வாா்டு உறுப்பினரும், திமுகவைச் சோ்ந்தவருமான வா்ஷா அழகேசன் போட்ட பதில் பதிவில், கூட்டணி தா்மத்துக்காக, தலைமைக்கு கட்டுப்பட்டு திமுக உறுப்பினா்கள், நிா்வாகிகள் அமைதியாக உள்ளனா். கும்பகோணம் மாநகராட்சி மேயா் க. சரவணன், தனது நடவடிக்கை மூலம் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறாரா என்று பதிவிட்டுள்ளாா்.