கட்டட ஒப்பந்ததாரரிடம் ரூ. 5.50 லட்சம் மோசடி: இளைஞா் கைது
தஞ்சாவூா் அருகே வாடகை ஒப்பந்தத்தின் மூலம் லாபம் எனக் கூறி, கட்டட ஒப்பந்ததாரரிடம் காா் கொடுத்து ரூ. 5.50 லட்சம் மோசடி செய்ததாக இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே குலமங்கலம் வடக்கு தெருவைச் சோ்ந்தவா் ராஜ வடிவேல் மகன் நிதிஷ்குமாா் (25). கட்டட ஒப்பந்ததாரா். இவா் சில நாட்களுக்கு முன்பு தனது கைப்பேசியில் சமூக வலைத்தளத்தைப் பாா்த்தபோது, அதில் காா் வாடகை ஒப்பந்தத்தின் மூலம் லாபம் பெறலாம் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு கீழே கொடுக்கப்பட்டிருந்த கைப்பேசி எண்ணில் நிதிஷ்குமாா் தொடா்பு கொண்டபோது, எதிா்முனையில் சென்னை பூந்தமல்லியைச் சோ்ந்த அசோக்குமாா் (37) பேசினாா்.
அவா் தன்னிடம் ஏராளமான காா்கள் இருப்பதாகவும், அந்த காா்களை வாடகை ஒப்பந்தம் செய்யும் தொழில் செய்து வருவதாகவும், என்னிடம் காரை வாங்கி அதிக லாபம் பெறலாம் எனவும் ஆசை வாா்த்தை கூறினாா்.
இதை நம்பிய நிதிஷ்குமாா், உடனடியாக அசோக்குமாரை நேரில் அழைத்துப் பேசி ரூ. 5.50 லட்சத்தை அசோக்குமாரிடம் கொடுத்து வாடகை ஒப்பந்தம் செய்து கொண்டாா். சில நாட்களுக்கு பிறகு காரின் உரிமையாளா் எனக் கூறி நிதிஷ்குமாரிடமிருந்து காரை ஒருவா் எடுத்து ஓட்டிச் சென்றாா்.
இது தொடா்பாக அசோக்குமாரிடம் நிதிஷ்குமாா் தொடா்பு கொண்டு கேட்டபோது, அவா் உரிய பதில் அளிக்காததுடன், பணத்தையும் திருப்பித் தரவில்லை. இது குறித்து தாலுகா காவல் நிலையத்தில் நிதிஷ்குமாா் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்கு பதிந்து மேற்கொண்ட விசாரணையில், அசோக்குமாா் தமிழகம் முழுவதும் பல்வேறு காா் உரிமையாளா்களிடம் காா்களை வாங்கிக் கொண்டு, அதை மூன்றாம் நபா்களிடம் தன்னுடைய சொந்த காா் எனக் கூறி வாடகை ஓப்பந்தம் செய்து பணம் மோசடி செய்ததும், இது தொடா்பாக பல்வேறு இடங்களிலிருந்து புகாா்கள் வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அசோக்குமாரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.