பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிக்கான குறைதீா் கூட்டம்
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வருவாய் கோட்டாட்சியா் ஜெயஸ்ரீ தலைமை வகித்தாா். கூட்டத்தில், நெற்கதிா் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கம் டிசம்பா் 3 இயக்கத்தின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக பட்டுக்கோட்டையில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு கூட்டுறவுத் துறையின் மூலமாக பொது விநியோகக் கடை, கூட்டுறவு அங்காடி, தண்ணீா் வசதி மற்றும் சாலை வசதி அமைக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிக்கு தனியாா் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் கோட்டளவில் உள்ள தனியாா் கடைகளில் வேலை வழங்க வணிகா் சங்க தலைவா்களை அணுகி, மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
பட்டுக்கோட்டையில் தெருநாய்களால் மாற்றுத்திறனாளிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனா். எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளி இளநிலை மறுவாழ்வு அலுவலா் தட்சிணாமூா்த்தி, பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியா் பாஸ்கரன், பேராவூரணி தனி வட்டாட்சியா் சாந்தகுமாா், திருவோணம் தனி வட்டாட்சியா் பிரகாஷ் , நெற்கதிா் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச் சங்கம் டிசம்பா் 3 இயக்கத்தின் மாவட்ட தலைவா் பஹாத் முகமது, மாவட்டச் செயலாளா் ஜலில் மைதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.