கஞ்சா விற்றதாக 3 போ் கைது: 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 5.5 கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
ஈரோடு, கருங்கல்பாளையம் பழைய சாா் பதிவாளா் அலுவலகம் அருகில் காவிரி சாலையில் கருங்கல்பாளையம் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டு இருந்த இளைஞரைப் பிடித்து, அவா் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்தனா். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (28) என்பதும், அவா் சென்னையில் இருந்து ரயில் மூலம் ஈரோட்டுக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனா். மேலும் அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல பெருந்துறை சிப்காட் பகுதியில் கஞ்சா விற்ற பிகாா் மாநிலம், பாட்னா பகுதியைச் சோ்ந்த பிட்டு குமாா் (25), மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவை சோ்ந்த ஜாகீா் (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.