காமராஜா் விருது பெற்ற பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு நிதி
கடந்த ஆண்டுகளைவிட முன்கூட்டியே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கு, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்வட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான நகரங்களில் வினாத்தாள் திருத்தும் பணிகள் இன்னும் 10-12 நாள்களில் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதாவது, பெரும்பாலான பாட வினாத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது ஒரு நகரம் என்று எடுத்துக்கொண்டால் அங்கு வணிகவியல், மனோதத்துவவியல் பாட வினாத்தாள்கள் மட்டுமே மதிப்பிடப்பட்டு வருவதாகவும், இது போல ஒவ்வொரு நகரத்திலும் ஒருசில பாட வினாத்தாள்கள் மட்டுமே நிலுவையில் இருப்பதால் இன்னமும் இரண்டு வாரத்தில் முழுமையாக வினாத்தாள் திருத்தும் பணி முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை திட்டமிட்டபடி வினாத்தாள் திருத்தும் பணி சென்றுகொண்டிருக்கிறது. எனவே கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மிக விரைவாக தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று சிபிசிஎஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு நகரங்களிலும் கிட்டத்தட்ட 3 அல்லது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் இவர்கள் 25 முதல் 30 விடைத்தாள்களை திருத்த வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் திருத்திய விடைத்தாள், மீண்டும் ஒருவர் மறுமதிப்பீடு செய்து, பிறகு கூடுதலாக ஒரு மேற்பார்வையாளரால் பார்வையிடப்பட்டு வருகிறது.
எனவே, இதே வேகத்தில் சென்றால், மே மாதம் முதல் வாரத்திலேயே சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்றும், மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுடனே சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியாவது நன்மையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடைந்தது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கிறார்கள்.
நடப்புக் கல்வியாண்டில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கின. 10-ஆம் வகுப்புத் தோ்வுகள் மாா்ச் 18-ஆம் தேதி முடிவடைந்தது. 12-ஆம் வகுப்புத் தோ்வுகள் ஏப்ரல் 4-ஆம் தேதி முடிவடைந்தது.
பொதுவாக, சிபிஎஸ்இ விடைத்தாள்கள் திருத்தும் பணி 40 முதல் 45 நாள்கள் வரை ஆகும். எனவே, ஏப்ரல் 4ஆம் தேதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில், மிக விரைவாகவே தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில், மே 13ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே, இந்த ஆண்டும் அதே இடைவெளியில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விடைத்தாள் திருத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால், முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஆண்டுதோறும் இப்படி செய்திகள் வெளியானாலும் மே இரண்டாம் வாரத்தில்தான் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்.