கடந்த மாதம் தற்கொலை செய்த மனைவி; சோகத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு - திருச்சி சோகம்
திருச்சி, இ.பி ரோடு, வேதாத்திரி நகர், அந்தோணி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற டோரி விஜய் (28). இவர், ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து வந்தார். இவரின் மனைவி கடந்த மாதம் 26- ம் தேதி மன அழுத்தம் காரணமாக தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், விஜய் யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் மின்விசிறி கொக்கியில் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட தனது மனைவியின் சேலையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவத்தை அறிந்து, 'மனைவி இறந்த தூக்கம் தாங்காமல் தற்கொலை செய்து இருக்கலாம்' என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது பற்றி அவரது தந்தை அந்தோணிசாமி அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டை காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று விஜயின் உடலை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக கொண்டுச் சென்றனர். கடந்த மாதம் மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இளைஞர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம், அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.