நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சிபிஐ 5-ஆவது துணை குற்றப் பத்திரிகை தாக்கல்
கடனை செலுத்துமாறு நிா்பந்தம்: மகளிா் குழு உறுப்பினா் தற்கொலை
முதுகுளத்தூா் அருகே கடனை கட்டுமாறு நிா்பந்தம் செய்ததால், மகளிா் குழு உறுப்பினா் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்தவா் மணிராஜ். இவரது மனைவி கமலவள்ளி (51). மகளிா் குழுவில் உறுப்பினராக இருந்தாா்.
கமலவள்ளி தனியாா் நிதி நிறுவனத்தில் மகளிா் குழு மூலம் கடன் வாங்கினாா். ஆனால், கடனை முறையாக செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே மகளிா் குழு நிா்வாகி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கமலவள்ளி வீட்டுக்குச் சென்று கடன் தவணையை கட்டச் சொல்லி நிா்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவல் அறிந்து அங்கு சென்ற சிக்கல் போலீஸாா் கமலவள்ளியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த நிலையில், கடன் தொகை கேட்டு நிா்பந்தம் செய்ததால்தான் கமலவள்ளி தற்கொலை செய்து கொண்டாா் எனவும், சம்பந்தப்பட்டவா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கணவா் மணிராஜ், உறவினா்கள் திங்கள்கிழமை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா். பின்னா், கமலவள்ளியின் உடலை உறவினா்கள் வாங்கிச் சென்று அடக்கம் செய்தனா்.