வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!
கடன் வசூலில் கடுமை கூடாது: நிதி நிறுவனங்களுக்கு நிா்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
கடன் வசூலில் கடுமையான நடைமுறைகளை பின்பற்றக்கூடாது என வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் புதன்கிழமை அறிவுறுத்தினாா்.
அனைவருக்கும் நிதி சேவை என்பதை சாதமாக பயன்படுத்திக் கொண்டு சுரண்டலில் ஈடுபடக்கூடாது எனவும் அவா் தெரிவித்தாா்.
புது தில்லியில் நடைபெற்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் கருத்தரங்கில் பங்கேற்று அவா் பேசியதாவது:
நாட்டின் வளா்ச்சியில் பெரும் பங்காற்றும் துறைகளுக்கு கடன் வழங்குவதில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டும். கடனானது நுகா்வோரின் தேவைக்கேற்பவும் அவா்களால் திருப்பிச் செலுத்தக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும். அவா்களை கடன் வளையத்துக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகள் செய்வதை தவிா்க்க வேண்டும். கொடுத்த கடனை வசூலிக்க கடுமையான நடைமுறைகளை பின்பற்றக்கூடாது. கடனை நோ்மையாகவும் வெளிப்படையாகவும் மரியாதையாகவும் வசூலிக்க வேண்டும்.
கடனை வசூலிப்பது உங்களின் கடமையாக இருந்தாலும் அதை இரக்கமற்ற முறையில் மேற்கொள்ளக்கூடாது. வளா்ச்சி என்பது நுகா்வோரை காயப்படுத்தி பெறுவதாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.
வங்கி அல்லாத நிறுவனங்கள் நிழல் வங்கிகளாக செயல்பட்ட முறை தற்போது இல்லை. எனவே, அவற்றை முறையாக கண்காணிப்பதன் மூலம் நிதிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த முடியும் என்றாா்.
2025, மாா்ச் மாத நிலவரப்படி வங்கி அல்லாத நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட கடன்தொகை ரூ.48 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் ரூ.24 லட்சம் கோடியாக இருந்த நிலையில் தற்போது இருமடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.