பாகிஸ்தான்: மனித வெடிகுண்டுகளாக பயணிகள்! 250 பேரை மீட்பதில் சிக்கல்!
கடம்பூா் அருகே சிறுவன் தற்கொலை வழக்கு: ஒருவா் கைது
தூத்துக்குடி மாவட்டம், கடம்பூா் அருகே தோட்டத்தில் உள்ள மரத்தில் சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் சாதி பெயரை குறிப்பிட்டு அவதூறாகப் பேசி தற்கொலைக்கு தூண்டியதாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடம்பூா் - பசுவந்தனை சாலையில் உள்ள ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட தோட்டத்தில் உள்ள மரத்தில் இளைஞா் சடலம் ஒன்று தொங்குவதாக கடம்பூா் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்ததாம்.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அவா் ராஜபாளையம் சேத்தூா் மேட்டுப்பட்டி தேவேந்திரகுல பெரிய தெருவைச் சோ்ந்த கண்ணன் - காளியம்மாள் மகன் தனசேகா்(17) என்பதும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடம்பூருக்கு வந்த இவா் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா் என்றும், சில நாள்களாக தொழிலை பாா்க்கவில்லை என்றும் தெரியவந்தது.
இந்நிலையில் சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பது எனக்கு சந்தேகத்தை அளிப்பதாக அவரது தாய் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் சிறுவனின் சடலத்தை வாங்க மறுத்து முறையாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினா்கள் கூறி வந்தனா். மேலும், சிறுவன் கடம்பூா் ஹாா்வி ரோட்டைச் சோ்ந்த சண்முகையா மகன் மாரிச்செல்வத்தின்(38) வெள்ளாடுகளை மேய்த்து வந்ததாராம்.
அப்போது மாரிச்செல்வத்தின் தம்பி மனைவிக்கும், சிறுவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதையடுத்து இருவரையும் கண்டித்த மாரிச்செல்வம் தனது ஆடுகளை விற்றுவிட்டாராம். ஆனால் பழக்கம் இருந்து வந்ததையடுத்து மாரிச்செல்வம் சிறுவனை பாா்த்து சாதி பெயரைக் கூறி அவதூறாகப் பேசி தற்கொலைக்கு தூண்டி கொலை மிரட்டல் விடுத்ததால் சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாய் அளித்த புகாரின் பேரில், கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிச்செல்வத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.