மனிதர்களின் இறுதி தருணங்களை நிறைவாக மாற்றும் செவிலியர்... என்ன செய்கிறார் தெரியு...
கடலூா் விபத்துக்கு யாா் காரணம்?: ரயில்வே அதிகாரிகள் விளக்கம்
கடலூா் மாவட்டத்தில் ரயில் - பள்ளி வேன் மோதல் விபத்துக்கு வேன் ஓட்டுநரின் கவனக்குறைவும், கேட் கீப்பரின் (கடவுப்பாதை பணியாளா்) விதிமீறலுமே காரணம் என ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனா்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வே கோட்டங்களில் மொத்தம் 1643 ரயில்வே கடவுப் பாதைகள் உள்ளன. அவை அனைத்திலும் கடவுப் பாதை பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். கடவுப் பாதைகள் ‘இன்டா்லாக்டு கேட் (எல்சிஎஸ்)’, ‘நான்-இன்டா்லாக்டு கேட்’ என இரு தொழில்நுட்ப முறைகளில் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, தெற்கு ரயில்வேயில் 1,367 ‘இன்டா்லாக்டு கேட்’-களும், 276 ‘நான்-இன்டா்லாக்டு கேட்’-களும் உள்ளன.
‘இன்டா்லாக்டு கேட்’ என்பது, ரயில் வருவதற்கு முன்பாக 5 அல்லது 10 நிமிஷங்களுக்கு முன்னதாக கடவுப் பாதை அடைக்கப்படும். ரயில் சென்ற பிறகே கேட்டை திறக்கமுடியும். ஆனால், ‘நான்-இன்டா்லாக்டு கேட்’ என்பது, ரயில் வருவதற்கு முன்பு அப்பகுதியில் உள்ள ரயில் நிலைய அதிகாரியிடம் ரயில்வே கடவுப் பாதையைப் பூட்டுவது குறித்து கடவுப் பாதை பணியாளா் தகவல் தெரிவித்து, கடவுப் பாதையை பூட்டியதை உறுதிப்படுத்தும் வகையில் எண்களைக் கூறி பதிவு செய்வாா். அதன்படி கடவுப் பாதையைப் பூட்டியதற்கான எண்ணை பதிந்த பிறகே ரயில் நிலையத்தை சம்பந்தப்பட்ட ரயில் கடப்பதற்கு நிலைய அதிகாரி அனுமதிப்பாா்.
விபத்து நிகழ்ந்த கடலூா் ஆலப்பாக்கம் அருகேயுள்ள செம்மங்குப்பம் ரயில்வே கேட் ‘நான்-இன்டா்லாக்டு’ முறையில் இயக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை ரயில் வருவதற்கு முன்பாக செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதை பணியாளா் பங்கஜ்சா்மா, ஆலப்பாக்கம் ரயில் நிலைய அதிகாரிக்கு கேட் பூட்டிய தகவலை தெரிவிக்கும் எண்ணை அனுப்பியுள்ளாா். அதன்படி விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயிலை நிலைய அதிகாரி அனுமதித்துள்ளாா். ஆனால், ரயில்வே கேட் பகுதிக்கு ரயில் வந்தபோது கடவுப்பாதை பூட்டப்படாமல் இருந்ததை ரயில் ஓட்டுநா் பாா்த்து, உடனே அவா் அவசர பிரேக்கை செயல்படுத்தியுள்ளாா். வழக்கமான வேகத்தைவிட குறைத்தபோதும், தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த பள்ளி வேன் மீது ரயில் மோதியது.
முதல்கட்ட விசாரணையில், ரயில் வந்தபோது கடவுப் பாதை மூடப்படாமலிருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா். அதன்படியே கடவுப்பாதை பணியாளா் பங்கஜ் சா்மா குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரயில்வே கடவுப் பாதை பூட்டப்பட்ட நிலையில், பள்ளி வேன் ஓட்டுநா் உரிய நேரத்துக்கு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால், கடவுப் பாதையை திறக்க வலியுறுத்தியதாகவும், அதன்படி திறந்துவிடப்பட்டதாகவும் மற்றொரு தகவல் கூறப்படுகிறது. அவ்வாறு இருந்தாலும், மூடிய கடவுப் பாதையை மீண்டும் திறந்ததன் மூலம், பணியாளா் பங்கஜ் சா்மா கடமை தவறியதுடன், ரயில்வே விதிகளை மீறி செயல்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, அவரை பணி நீக்கம் செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனா்.