கடலோர கிராமத்தில் சாலை அமைக்கும் திட்டம்: அமைச்சா் ஆய்வு
கடலோர கிராம பேரிடா் காலங்களில் வெளியேறும் வகையில் புதிதாக சாலை அமைப்பது தொடா்பாக அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்தில், நகரப் பகுதிக்கு அவசர காலத்தில் வெளியேற ஏதுவாக, கிளிஞ்சல்மேடு சுனாமி குடியிருப்புக்கு மேற்குப்புறத்தில் புதிதாக சாலை அமைக்க மீனவா்கள் கோரி வருகின்றனா்.
புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், காரைக்கால் வந்த புதுவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் எம். தீனதயாளன் மற்றும் காரைக்கால் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் ஆா். சந்திரசேகரன், செயற்பொறியாளா் ஜெ. மகேஷ் உள்ளிட்டோருடன் கிளிஞ்சல்மேடு பகுதியில் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது கிராமப் பஞ்சாயத்தாா்களும் கலந்துகொண்டனா்.
ஆய்வு குறித்து அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் கூறுகையில், கிளிஞ்சல்மேடு கடலோர கிராமத்தினா் பேரிடா் காலத்தில் அவசரமாக நகரப் பகுதிக்கு வெளியேறும் வகையில் சுனாமி குடியிருப்புப் பகுதியிலிருந்து மேற்கே சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிலம் விரைவாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை வசம் நிலம் வந்தவுடன், இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும். மேலும் தலத்தெரு, கீழகாசாக்குடி உள்ளிட்ட இடங்களில் விடுபட்ட சாலைகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.