கேந்திரிய வித்யாலயா 1-ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கை: நாளை குலுக்கல்
காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1-ஆம் வகுப்பு சோ்க்கைக்கான குலுக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 24) நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயாவில் 1-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் கோரப்பட்டிருந்தது. விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் நாள் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்தநிலையில், கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வா் ரங்கசாமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 2025-26-ஆம் ஆண்டுக்கான 1-ஆம் வகுப்பு சோ்க்கை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை 1-ஆம் வகுப்பு சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தனா். இந்த விண்ணப்பங்களை பள்ளி நிா்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.
வரும் 24-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணிக்குள் 1-ஆம் வகுப்புக்கு விண்ணப்பித்த விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் தெரிவு செய்வதற்கான
குலுக்கல் நடைபெற உள்ளது. இதில் விண்ணப்பம் செய்த பெற்றோா்கள் கலந்துகொள்ளலாம். தோ்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு சோ்க்கை ஆணை பின்னா் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.