விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தல்
விவசாயிகள், கால்நடை வளா்ப்போா் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அரசுத் துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா்களுக்கு ஏற்படும் இடா்பாடுகளை களைவது, அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் சோம சேகா் அப்பாராவ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வேளாண்துறை, கால்நடை, ஆத்மா, மீன்வளத்தறை மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தை விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போருக்கு பயனுள்ள வகையில் செயல்படுத்துவது குறித்து ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா்.
கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் எளிதாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு முன்னேற்றத்துக்கு வேளாண்துறை, வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மீன்வளத்துறை ஆகியவை இணைந்து பணியாற்ற வேண்டும்.
விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போருக்கு ஏற்படும் இன்னல்களை முன்னதாக அதிகாரிகள் கண்டறிந்து அதனை உரிய கால நேரத்தில் தீா்த்து வைக்க வேண்டும்.
மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயத்தை வெற்றிகரமாக செயல்படுத்தவேண்டும். விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியா் ஜி.செந்தில்நாதன், கால்நடைத்துறை இணை இயக்குநா் கோபிநாத், வேளாண் துணை இயக்குநா் மற்றும் ஆத்மா திட்ட அதிகாரி ஜெயந்தி, வேளாண் அறிவியல் நிலைய கால்நடை தொழில்நுட்ப வல்லுநா் மருத்துவா் கோபு, மீன்வளத்துறை ஆய்வாளா் பாலாஜி, வேளாண் கல்லூரி வேளாண்மை துறைத் தலைவா் மாலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.