கடல் பேய்களைத் தேடிப்போகும் ஜிவி, கரை சேருவாரா? - கிங்ஸ்டன் திரைவிமர்சனம்
ஜிவி பிரகாஷ் நடிப்பில் கமல் பிரகாஷ் இயக்கத்தில் புதிய கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கிங்ஸ்டன்! படம் எப்படி இருக்கிறது?
முதலில் கதைக்களம் என்னவென்றால்... மீனவ கிராமம் ஒன்றில் நடக்கும் மரணம் ஒன்றால், அந்தக்க் கிராமத்தில் பல இன்னல்கள், துயரங்கள் அரங்கேறுகின்றன. இந்த அமானுஷிய பிரச்னைகளுக்கு முடிவு கட்ட, மரணித்த அந்த உடல் இந்த கிராமத்து மண்ணில் புதைக்கப்பட்டிருப்பதுதான் காரணம் என பாதிரியார்கள் சொல்ல, அந்த உடலை சவப்பெட்டியோடு சேர்த்து கடலில் போட்டுவிடுகிறார்கள்! அந்த ஆன்மா கடலைக் கட்டுக்குள் கொண்டுவந்து அங்கு மீன் பிடிக்க இறங்கும் மீனவர்கள் அனைவரையும் கொன்று தீர்க்கிறது. ஆண்டுகள் நகர, அதே கிராமத்தில் பிறந்து வளரும் ஜிவி பிரகாஷ், கடலுக்குள் சென்று இந்த கட்டுக்கதைக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். அவரை இந்த முடிவுக்குத் தள்ளியது எது? அந்த மரணித்த நபர் யார்? அவரது கதை என்ன? உண்மையில் மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் மரணிக்கக் காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்க முயல்வதுதான் இந்த கிங்ஸ்டன் திரைப்படம்!

முதலில் ஜிவியின் நடிப்பைப் பற்றி பார்த்தால், அவரது முதல் படத்தோடு இந்த 25 ஆவது படத்தை ஒப்பிடுகையில் நடிப்பில் கொஞ்சம் தேறியிருக்கார் என்பதை மறைக்க முடியாது. ஆனாலும் ஒரு கதாப்பாத்திரத்தில் பொறுந்தி நடிப்பதற்கு, முழு கதாநாயகனாக மாறுவதற்கு அவருக்கு இன்னும் பயிற்சிகள் தேவைப்படுகின்றன என்பதையும் மறுக்க முடியாது. முடிந்த அளவு நடிப்பைக் கொடுத்து படத்தை நகர்த்த கைகொடுத்திருக்கிறார். இந்தக் கதாப்பாத்திரத்திற்கு மிகுந்த நடிப்பும் அவசியப்படாது என்பதால் ஜிவிக்கு ஏற்ற கதாப்பாத்திரமாகவே இந்த கிங்ஸ்டன் இருக்கிறான். பல இடங்களில் கிங்ஸ்டனாக இல்லாமல் ஜிவியாக மட்டுமே தெரிவது ஒரு முக்கிய குறைதான்! கதையிலிருந்து அந்நியமாகத் தெரிந்தாலும் முக்கால்வாசிப் படத்தில் எப்படியோ நின்றுவிடுகிறார்.
மற்ற முக்கியக் கதாப்பாத்திரமாக திவ்ய பாரதி, சபுமோன், குமாரவேல், அழகம் பெருமாள் உள்ளிட்டோர் தேவையான நடிப்பைக் கொடுத்து கதாப்பாத்திரங்களாக திரையில் நிற்கின்றனர். குமரவேலின் கதாப்பாத்திரம் உண்மையில் மிக முக்கியமானதாகத் தெரிந்தாலும் வெறும், கதை சொல்லும் தாத்தாவாக மட்டுமே பயன்படுத்தப்பட்டுவிட்டதாக தோன்றுகிறது. திவ்ய பாரதி வழக்கமான கதாநாயகியாக இருக்கக் கூடாது என்பதற்காக அவருக்கென ஒரு கதை கொடுத்து பின் அதைப் பறித்துவிட்டது சிறிய ஏமாற்றம். சமீபமாக நல்ல கதாப்பாத்திரங்களை ஏற்று நடிக்கும் சேட்டனுக்கும் இது நடிப்பு தீணி போடும் கதாப்பாத்திரமாக இருக்கிறது.

முக்கியமாக ஜிவியின் நண்பர்களாக வரும் 3 பேருமே இதுவரை குட்டிக்குட்டிக் கதாப்பாத்திரங்களில் ஏற்கனவே திரையில் பார்க்கப்பட்டவர்கள். ஆனால் இந்தப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களையும் எங்களால் ஏற்று நடிக்க முடியும் என்பதை காட்டியிருக்கின்றனர். இன்ஸ்டா பிரபலாக முதல் அடி வைத்து திரையைத் தொட்டிருக்கும் அருணாச்சலேஸ்வரன் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருப்பது அவரது ரசிகர்களை சந்தோசப்படுத்துகிறது.
இசை எனப் பார்த்தால் “ஜிவி” என்ற TAGற்கு ஏற்ற பாடல்கள் இதில் இடம்பெறவில்லை என்பதே உண்மை. அதிலும் படத்தின் முதல் பாடலுக்கு ரசிகர்கள் "இல்ல.. இது எங்க ஜிவி போட்ட பாட்டு இல்ல” எனக் குமுறுகிறார்கள். ஆனால் மற்ற பாடல்கள் ஓரளவுக்கு OKவாக இருக்கின்றன.
ஆனால் எப்போதும்போல பின்னணி இசையில் திருப்திபடுத்தியிருக்கிறார் ஜிவி. கதைக்கு ஏற்றார் போல காட்சிகள் கேட்கும் அழுத்தத்தை தன் இசை மூலம் வழங்கியிருக்கிறார்.

கிராபிக்ஸ் காட்சிகள் பற்றி பேசுவதென்றால், குறிப்பிட்ட பட்ஜெட்டில் போதுமான அளவில் வேலைகளைக் கட்சிதமாக செய்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இது பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை என்றாலும், நல்ல முறையில் காட்சிகளைக் கொடுக்க படக்குழு முயன்றிருப்பதைப் பார்க்க முடிகிறது. கடலிலிருந்து குதிக்கும் பேய்களுக்கான ஒப்பணைகளும் மிகச் சிறப்பாகவே செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக கதை எனப் பார்க்கும்போது இயக்குநர் சில சிக்கல்களை விட்டுச்சென்றிருக்கிறார். ஜிவி கதாப்பாத்திரமும் சரி, கதையின் மொத்த போக்கும் சரி, முழுதான வடிவில் இல்லாதது நெருடலாகவே உள்ளது. ஜிவி கதாப்பாத்திரம் பேயைப் பார்த்தாலும் வேட்டியை மடித்துக்கொண்டு சண்டைக்குப்போவது கதையின் உண்மைத் தன்மையிலிருந்து மிக மிகத் தள்ளி நிற்கவைக்கிறது. குறைந்தபட்சம் அவருடைய இந்த தைரியத்திற்கான காரணம் எதுவும் இல்லாமல் இருப்பது, ஹீரோ என்பதற்காக மட்டுமே அவர் இப்படி நடந்துகொள்கிறாரோ என்றே தோன்றுகிறது.

புதிய கதைக்களத்தில், புதிய முயற்சியின் மூலம் இந்தப் படத்தை தூக்கி நிறுத்த முயன்றிருக்கிறார்கள். ஒரு புதிய முயற்சி என இந்தப் படம் தனித்து நிற்காவிட்டாலும், சீட்டிலேயே படுத்து தூங்க வைக்கும் படங்கள் வரிசையில் கிங்ஸ்டன் இல்லாதது ஆறுதல்தான். பயப்படவைக்கும் காட்சிகளுக்காகவும், விஷுவலாக புதிய முயற்சியைப் பார்க்க விரும்புபவர்களும் கண்டிப்பாக கிங்ஸ்டனைக் கண்டு ரசிக்கலாம்.