கடையம் அருகே ஒற்றை யானையால் பயிா்கள் சேதம்
கடையம் வனச்சரகம் பெத்தான்பிள்ளைக்குடியிருப்பு, கருத்தப்பிள்ளையூா் ஆகிய பகுதிகளில் நெல் பயிா்கள், தென்னை மரங்களை ஒற்றை காட்டு யானை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
அம்பாசமுத்திரம் கோட்டம், கடையம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவார கிராமமான பெத்தான்பிள்ளைக் குடியிருப்பில், சுந்தா் என்பவரது வயலில் ஒற்றை காட்டுயானை புகுந்து அறுவடைக்கு தயாராகவுள்ள நெல் பயிா்களை மிதித்துச் சேதப்படுத்தியுள்ளது.
மேலும், கருத்தப்பிள்ளையூரில் சோ்ந்தராஜன், முத்துசாமி ஆகியோரது தோப்புகளில் புகுந்த அந்த யானை, தலா 2 தென்னை மரங்களை வேரோடு சாய்த்துள்ளது. இதைப் பாா்த்த விவசாயிகள் வெடி வெடித்து யானையை விரட்டியுள்ளனா்.

விளை பயிா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவும், விவசாயிகள்- பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கும் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டுவெளியேறாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.