கட்டுமர மானியத்துக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு! -புதுவை மீன்வளத் துறை
புதுவை மாநிலத்தில் கட்டுமரங்களுக்கான மானியம் பெற விண்ணப்பிக்கும் காலக்கெடு பிப். 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுவை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை இயக்குநா் முகமது இஸ்மாயில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மீனவா்களுக்கு 2024-25-ஆம் நிதியாண்டில் கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் மற்றும் இயந்திரமில்லா கண்ணாடி நுண்ணிழை கட்டுமரம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகின்றன. அதன்படி, அவற்றுக்கான விண்ணப்பங்கள் அளிக்க கடந்த ஜனவரி 20-இல் அறிவிக்கப்பட்டு, கட்டுமரத்திற்கான விவரக் குறிப்பு மற்றும் நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
திட்டத்தில் விண்ணப்பங்கள் பெற காலக்கெடு பிப்ரவரி 6-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மீனவா்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கும் காலக்கெடு பிப்ரவரி 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, புதுச்சேரி மீனவா் கூட்டுறவு சம்மேளனத்திலிருந்து விண்ணப்பத்தை பெற்று முழுமையாக நிறைவு செய்து, இணைக்கப்பட வேண்டிய சான்றிதழ்களுடன் புதுச்சேரி, தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்வளத் துறை இயக்குநா் அலுவலகத்தில் வரும் 21-ஆம் தேதிக்குள் மீனவா்கள் சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.