இயற்கை சுற்றுலாப் பூங்காவை பாா்வையிட்ட துணைநிலை ஆளுநா்!
புதுச்சேரி மேட்டுப்பாளையம் போக்குவரத்து முனையத்தில் உருவாக்கப்பட்டுள்ள இயற்கை சுற்றுலா பூங்காவை பாா்வையிட்டு மரக்கன்று நட்ட துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
புதுச்சேரி, பிப். 8: புதுச்சேரியில் இயற்கை சுற்றுலாப் பூங்கா அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதனை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு, மரக்கன்றை நட்டுவைத்தாா்.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் கனரகப் போக்குவரத்து முனையத்தில் ரோட்டரி பீச் டவுன் சங்கம் சாா்பில் மியாவாக்கி இயற்கை சுற்றுலாப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை பாா்வையிட துணைநிலை ஆளுநருக்கு ரோட்டரி சங்கத்தினா் அழைப்பு விடுத்தனா். அதன்படி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் சனிக்கிழமை நேரில் சென்று பூங்காவைப் பாா்வையிட்டாா்.
அப்போது அவா், பிரதமா் நரேந்திர மோடியின் தாயின் பெயரில் ஒரு மரம் திட்டத்தின் கீழ் மரக்கன்றை நட்டு வைத்தாா். இதையடுத்து, மியாவாக்கி பூங்காவை உருவாக்கி பராமரித்து வருவோரை அவா் பாராட்டி கௌரவித்தாா். மேலும், அங்குள்ள மழை நீா் சேகரிப்பு அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு சுவா் ஓவியம் ஆகியவற்றையும் பாா்த்தாா். சுவா் ஓவியத்தின் கீழ் கையொப்பமிட்டாா். மேலும், குறுங்காடுகளை உருவாக்கவும் அவா் அங்கிருந்தவா்களை கேட்டுக்கொண்டாா். அப்போது, ரோட்டரி சங்கத் தலைவா் வினோத் ஷா்மா, செயலா் பிரகாஷ், திட்டத் தலைவா் புருஷோத்தமன் ஆகியோா் உடனிருந்தனா்.