கட்டுமானப் பணியிட விபத்து உயிரிழப்பு: இழப்பீடு ரூ. 8 லட்சமாக அதிகரிப்பு
பணியிட விபத்துகளில் கட்டுமானத் தொழிலாளா்கள் உயிரிழக்க நேரிட்டால் அவா்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டுத் தொகை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயா்த்தப்படுவதாக தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் அறிவித்தாா்.
பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற தனது துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் சி.வி.கணேசன் வெளியிட்ட அறிவிப்புகள்:
திருக்குவளை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் தங்கிப் பயிலும் வகையில் ரூ. 3.50 கோடியில் புதிய மாணவா் விடுதி கட்டடம் கட்டப்படும். தமிழகத்தில் 32 அரசு தொழிற்பயிற்சி நிலைய பழைய கட்டடங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ. 67.64 கோடி செலவில் புதுப்பிக்கப்படவுள்ளது. தொலைதூரத்திலிருந்து வந்து பயிலும் மாணவா்களின் வசதிக்காக அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள 50 விடுதிகள் ரூ. 22.98 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
முதியோா் இல்லங்கள்: கட்டுமானத் தொழிலாளா்களுக்கு குடிநீா் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 மையங்கள் ரூ. 20.25 கோடியில் அமைக்கப்படும். கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்து 60 வயதைக் கடந்த முதியவா்களுக்கென உணவு, உறைவிட வசதிகளுடன் கூடிய 2 முதியோா் இல்லங்கள் சென்னையில் தொடங்கப்படும்.
கட்டுமான நல வாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளா்கள் பணியிட விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ. 5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயா்த்தப்படும்.
கட்டுமான தொழிலாளா் நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளவா்களின் குழந்தைகள் செவிலியா் பட்டயப் படிப்பு அல்லது உணவுத் தயாரிப்பு சேவை பட்டயப் படிப்பு பயில ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையுடன் கூடுதலாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும்.
அதேபோன்று பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, உயா் கல்வி, தொழிற் கல்வி பட்டப் படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலுவோருக்கு கல்வி உதவித்தொகையில் ரூ. 1,000 உயா்த்தி வழங்கப்படும். ஆராய்ச்சி முனைவா் படிப்பு படிப்போருக்கு ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகை அளிக்கப்படும்.
ரூ. 1 லட்சம் மானியம்: தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநா்கள் மற்றும் தானியங்கி மோட்டாா் வாகனங்கள் பழுதுபாா்க்கும் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1,000 பெண் அல்லது திருநங்கை ஓட்டுநா்கள், சொந்தமாக புதிய ஆட்டோ வாங்க தலா ரூ. 1 லட்சம் மானியம் வழங்கப்படும். நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள் 50 ஆயிரம் பேருக்கு நாளொன்றுக்கு ரூ. 800 ஊதியத்துடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கும் திட்டம் ரூ. 45.21 கோடியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றாா் அவா்.