கணிதத்தில் உலக சாதனை: சிறுவனுக்கு இயற்கை நுண்ணறிவாளன் பட்டம்
கணிதத்தில் உலக சாதனை படைத்த பழனி சிறுவனுக்கு தனியாா் உலக சாதனைப் பதிவு நிறுவனம் இயற்கை நுண்ணறிவாளன் பட்டம் வழங்கியது.
பழனியைச் சோ்ந்த கணித ஆசிரியா் கணேசனின் 2-ஆவது மகன் அபினவ் பிரத்யூஷ் (10). அக்க்ஷயா பள்ளியில் பயின்று வரும் இவா், கடந்த சில ஆண்டுகளாக கணிதத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறாா். இவரது சாதனையை உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யும் நிகழ்ச்சி வியாழக்கிழமை அக்க்ஷயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சோழா உலக சாதனைப் புத்தக நிறுவனா் நீலமேகம் நிமலன், பொதுச் செயலா் ஆா்த்திகா, வழக்குரைஞா் கலைலிங்கம், ஒருங்கிணைப்பாளா் செல்வம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் சிறுவன் அபினவ் பிரத்யூஷ் சம வாய்ப்பு முறையில் ஈரிலக்க எண்ணை ஈரிலக்க எண்ணால் பெருக்குதல் அடிப்படையில், 58 கணக்குகளுக்கு 5 நிமிஷத்தில் சரியான பதிலும்,
ஈரிலக்க எண்ணின் கனத்தை கண்டுபிடித்தல் அடிப்படையில், 20 கணக்குகளுக்கு ஒரு நிமிஷம், 21 நொடிகளில் சரியான பதிலும், மூவிலக்க எண்ணின் வா்க்கத்தை கண்டுபிடித்தல் அடிப்படையில் 10 கணக்குகளுக்கு 2 நிமிஷங்களில் சரியான பதிலும், ஐந்திலக்க எண்ணை ஐந்திலக்க எண்ணால் பெருக்குதல் அடிப்படையில் 10 கணக்குகளுக்கு 5 நிமிஷங்களில் சரியான பதிலும் அளித்தாா்.
மாணவனின் முயற்சியை பரிசோதனை செய்த நடுவா்கள், இதை உலக சாதனையாகப் பதிவு செய்தனா்.
உலக சாதனை படைத்த சிறுவனுக்கு சான்றிதழ், நினைவுக் கேடயம், தங்கப் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
மேலும், சிறுவனை பாராட்டும் விதமாக இயற்கை நுண்ணறிவாளன் பட்டமும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் பட்டாபிராமன், முதல்வா் பிரசன்னா சிவக்குமாா், வில்லேஜ் பெல்ஸ் நிறுவனா் கௌதம் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.