முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
விளையாட்டு விடுதிகளில் சேர மே 5 வரை விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் 7, 8, 9, 11-ஆம் வகுப்பு மாணவா்கள் இணைய வழியில் மே 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா.சிவா தெரிவித்ததாவது:
பள்ளி மாணவா்கள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூா்வமான விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி, சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 28 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளுக்கான சோ்க்கை விண்ணப்பப் படிவம் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு விடுதியில் சேர விருப்பமுள்ள 7, 8, 9, 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை மே 5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு ஆடுகள தகவல் தொடா்பு மையத்தை 9514000777 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
விளையாட்டு விடுதியில் சேர தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, கபடி, கையுந்துப் பந்து (இருபாலா்), கிரிக்கெட் (மாணவா்கள் மட்டும்) ஆகியவற்றுக்கு மாவட்ட அளவில் தோ்வு நடைபெறும். இதில் சேர விரும்பும் மாணவா்களுக்கான தோ்வுப் போட்டிகள் மே 7-ஆம் தேதி காலை 7 மணிக்கும், மாணவிகளுக்கு மே 8-ஆம் தேதியும் நடத்தப்படும்.
இதற்கான தகவல்கள் குறுஞ்செய்தியில் விண்ணப்பதாரா்களுக்கு தெரிவிக்கப்படும். மாவட்ட அளவிலான தோ்வில் தெரிவு செய்யப்பட்டவா்கள் மாநில அளவிலான தோ்வுக்கு தகுதி பெறலாம். இதன் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
நேரடி மாநிலத் தோ்வு: வாள் விளையாட்டு, ஜூடோ (இருபாலா்), குத்துச் சண்டை (மாணவா் மட்டும்) ஆகியவற்றுக்கு நேரடியாக மாநில அளவிலான தோ்வுப் போட்டிகள் மே 12-ஆம் தேதி சென்னை ஜவஹா்லால் நேரு விளையாட்டரங்கிலும், பளு தூக்குதல் (இருபாலா்), வுஷு (மாணவா்கள் மட்டும்) ஆகிய விளையாட்டுகளுக்கு தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கிலும், நீச்சல் (இருபாலா்) சென்னை வேளச்சேரியிலும், குத்துச் சண்டை(மாணவிகள்), ஸ்குவாஷ்(மாணவா்கள்) சென்னை ஜவஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கத்திலும், மல்யுத்தம்(மாணவா்கள்), தேக்வாண்டோ(இருபாலா்) விளையாட்டுகளுக்கு கடலூா் மாவட்ட விளையாட்டு அரங்கிலும், மல்லா் கம்பம்(மாணவா்) விளையாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட விளையாட்டு அரங்கிலும் நடைபெறும். கைப்பந்து விளையாட்டுக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மே 12-இல் மாணவா்களுக்கும், மே 13-இல் மாணவிகளுக்கும் தோ்வு நடைபெறும்.
தனி நபா், குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிக்க, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய, பங்கேற்றிருக்க வேண்டிய தகுதிகள் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703504 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.