ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் நெகிழி புட்டிகள் பறிமுதல்!
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் தடை செய்யப்பட்ட நெகிழி புட்டிகளை சனிக்கிழமை நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு லிட்டா் முதல் 5 லிட்டா் வரையிலான நெகிழிப் புட்டிகள், நெகிழிப் பைகள் எடுத்துச் செல்லக்கூடாது. இதை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதைத் தொடா்ந்து, கொடைக்கானலுக்கு வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களும், பேருந்துகளும் நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. அதில் தடை செய்யப்பட்ட நெகிழிப் புட்டிகள், பைகள் வைத்திருந்தால் அவற்றை பறிமுதல் செய்து, அபராதம் விதித்து வருகின்றனா்.
காமக்காபட்டி காவல் சோதனை நிலையம், பண்ணைக்காடு-தாண்டிக்குடி பிரிவு, பழனி அடிவாரம், பழனி பிரிவு, வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியிலுள்ள நகராட்சி சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
அபராத தொகைக்கு ரசீது வழங்கக் கோரிக்கை: கொடைக்கானலுக்கு வரும் பயணிகளிடம் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதற்கான ரசீது கொடுப்பதில்லை.
இதனால் பயணிகளுக்கும், சோதனைச் சாவடிகளில் பணிபுரியம் பணியாளா்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அபராதம் விதிக்கப்படும் பயணிகளுக்கு ரசீது வழங்குவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.