செய்திகள் :

கண்ணி வெடிகளை கண்டறியும் அசத்தல் `ஸ்மார்ட் ஷீ' - வடிவமைத்த இளம் விஞ்ஞானி சாலமோன் டேவிட்...!

post image

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தூய சவேரியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் இளம் விஞ்ஞானியான சாலமோன் டேவிட். இவர் சமீபத்தில் கன்னிவெடிகளை கண்டறியும் சென்சார் பொருத்திய ஸ்மார்ட் ஷீவை வடிவமைத்து இருந்தார். அவருடைய நவீன கண்டுபிடிப்புக்காக தேசிய அளவிலான 'ஐடியா மற்றும் புதுமைப் போட்டியில்' முதல் பரிசு பெற்றிருந்தார். சாலமோனின் அசத்தல் கண்டுபிடிப்பு குறித்து அறிந்துகொள்ள அவரை நேரில் அணுகினோம்.

"என் பெயர் சாலமோன் டேவிட். நான் தற்போது தூய சவேரியார் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறேன். எனக்கு அறிவியலில் அதிக ஆர்வமுண்டு. நான் சமீபத்தில் இராணுவ வீரர்கள் பயன்படுத்த ஏதுவாக கன்னிவெடிகளை கண்டறியும் தன்மையுடைய சென்சார் பொருத்திய ஸ்மார்ட் ஷீவை வடிவமைத்திருந்தேன்.

இளம் விஞ்ஞானி சாலமோன் டேவிட்

நான் வடிவமைத்துள்ள இந்த ஸ்மார்ட் ஷீ, அனைத்து வகை கன்னிவெடிகளையும் 3 மீட்டர் தொலைவிலே கண்டறிந்து, அபாயம் குறித்து முன்பே அறிவிக்கும் தன்மை கொண்டது. பொதுவாக பட்டர்ஃப்ளை கன்னிவெடிகளான PFM 1 கன்னிவெடிகளை மெட்டல் டிடெக்டர் வைத்து கண்டறிய இயலாது. ஆனால், இந்த ஸ்மார்ட் ஷீவில் MQ3 எரிவாயு சென்சார் பொருத்தப்பட்டுள்ளதால், இது வெடிக்கும் தன்மை கொண்ட சாதனங்களின் எரிவாயுவை கண்டறிந்து அபாயத்தை முன்பே அறிவுறுத்தும். இராணுவபூட் (Army Boot) உடைய அடிப்பாகத்தோடு MQ3 எரிவாயு சென்சார், மைக்ரோ கண்ட்ரோலர் மற்றும் நுண்ணிய அளவில் பைசோ மின்சார தட்டுகள் (Peizo electric plates) பொருத்தப்பட்டுள்ளது. சத்தம் மற்றும் வெப்பத்திலிருந்து பைசோ மின்சார தட்டுகள் தானே மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

எனவே, அபாயத்தை அறிவுறுத்த ஸ்மார்ட் ஷீவிற்கு தனியாக மின்சாரம் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை. ஸ்மார்ட் ஷூவில் மெட்டலை கண்டறியும் சென்சார், MQ3 எரிவாயு கண்டறியும் சென்சார், பைசோ மின்சார தட்டுகள், நுண்ணிய அளவிலான தெர்மல் மின்சார ஜெனரேட்டர் போன்ற பாகங்களை பொருத்தியுள்ளேன் மற்றும் பிற தேவையான பாகங்களை 3-டி பிரிண்ட் செய்து கொண்டேன். ஒரு ஸ்மார்ட் ஷூவை உருவாக்க சுமார் 1,000 ரூபாய் செலவானது. இந்த ஷூவை குறைந்த செலவில் அரசாங்கம் செயல்பாட்டுக்கு கொண்டு வர இயலும் மற்றும் இராணுவ வீரர்களுக்கு நிச்சயம் இந்த கண்டுபிடிப்பு நல்ல பலனளிக்கும்" என தனது கண்டுபிடிப்பு குறித்து பேசினார் டேவிட்.

இந்த கண்டுபிடிப்பை முதலில் 5 தமிழ்நாடு பட்டாளியன் இந்திய மாணவர் படை லெப்டினன்ட்டான கார்த்திகேஷ் முன்னிலையில் நிகழ்த்தி காட்டியதாக கூறினார். பின், மதுரை இடையப்பட்டியிலுள்ள இந்திய மாணவர் படை பயிற்சி அகாடமியின் தலைமையகத்தில் வைத்து கண்டுபிடிப்பை நிகழ்த்தி காட்டியதாக தெரிவித்தார். மேலும், சென்னையில் என்.சி.சி யின் டெபுட்டி டைரக்டர் ஜெனரலான (டிடிஜி) கமாடொர் எஸ். இராகவ் முன்னிலையில் கண்டுபிடிப்பை நிகழ்த்தி காட்டி, டெல்லியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தேர்வானதாக பகிர்ந்தார். டெல்லியில் பிரதமர், குடியரசு தலைவர், முப்படைத்தளபதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் முன்னிலையில் கண்டுபிடிப்பை நிகழ்த்தி காட்டிய பின் ஜனவரி 26 அன்று நடைபெற்ற பிரதம மந்திரி பேரணியில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றதாக கூறினார். இந்நிலையில், தேசிய அளவிலான 'ஐடியா அண்ட் இன்னோவேஷன் போட்டியில்' தமிழகத்துக்கு முதல் பரிசை வென்று தந்தார் டேவிட்.

தனது கண்டுபிடிப்பை ஆதரித்த பாளையங்கோட்டையில் உள்ள 5 தமிழ்நாடு பட்டாளியன் தேசிய மாணவர் படை, தொழில்நுட்ப ரீதியாக உதவிய லெப்டினன்ட் கார்த்திகேஷ், அறிவியல் ஆசிரியரான டெனிசன், பொருள்கள் சேகரிக்க உதவிய பள்ளியின் உதவி என்.சி.சி அதிகாரியான அருள்ராஜ் மற்றும் தலைமையாசிரியரான ரெவரட் ஃபாதர் ஜான் கென்னடி ஆகியோருக்கு தனது உளமார்ந்த நன்றிகளை பகிர்ந்தார். கண்டுபிடிப்புக்கான பாகங்களை 3டி பிரிண்ட் செய்ய மற்றும் பாகங்களை சேகரிக்க உதவிய தனது அத்தனை நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சிறப்பு நன்றிகளை தெரிவித்தார் டேவிட்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 'மத்திய அரசின் அறிவியல் கண்காட்சி - 2024' ல் பங்கேற்று, "இளம் விஞ்ஞானி விருது 2024" பட்டம் வென்ற டேவிட் தன்னுடைய பிற கண்டுபிடிப்புகள் குறித்தும் பகிர்ந்தார். "நான் பார்வைக் குறைபாடு உள்ளோருக்கான கேப் மற்றும் ஷு வடிவமைத்ததால், கடந்த ஆண்டு 'இளம் விஞ்ஞானி விருது' பெற்றேன். இவ்விருதை மத்திய அருங்காட்சிய அமைச்சகம், இஸ்ரோ மற்றும் மத்திய கல்வித்துறை இணைந்து வழங்கியது. பார்வை குறைபாடு உள்ளவர்க்காக நான் வடிவமைத்த ஷூ, நடக்கும் பாதையில் ஏதேனும் தடங்கல் இருந்தால் எச்சரிக்கும் வகையில் வடிவமைத்து இருந்தேன்.

பார்வை குறைபாடு உள்ளோருக்கான கேப், விபத்தில் சிக்கி இருப்போரை மீட்க ஏதுவாக அமைந்திருந்தேன். கேப்பில் ஜிபிஎஸ், ஜிஎஸ்எம், அதிர்வுகளை உணரவல்ல சென்சார், மற்றும் ஏர்பேக் சேம்பர் பொருத்தியிருந்தேன். விபத்தின் அதிர்வுகளை உணர்ந்து, உடனடியாக ஜிபிஎஸ் அவரது லொகேஷனை பகிரும், ஜிஎஸ்எம் தொலைப்பேசியில் அழைப்புகள் விடுக்கும் மற்றும் ஏர்பேக் சேம்பர் விபத்தில் சிக்கியவரின் தலையை காக்க, விபத்து ஏற்பட்டவுடன் ஏர்பேக்கை வெளியேற்றும். இந்த கண்டுபிடிப்பு எனக்கு 'இளம் விஞ்ஞானி - 2024' விருதை பெற்றுத்தந்தது.

ஏழாம் வகுப்பில் நான் பயின்ற போது, உப்பு நீரிலிருந்து மின்சாரம் உருவாக்கும் ஜெனரேட்டரை உருவாக்கினேன். காப்பர் அல்லது ஸிங்க் தட்டுகளை உப்பு நீரில் முக்கி அதிலிருந்து மின்சாரம் தயாரிக்க வல்லதாக உருவாக்கினேன். ஒரு கிளாஸ் நீரில் 14 வால்ட் மின்சாரம் கிடைத்தது. என் உடன் பயின்ற ஸ்டீவ் ஜெஃப்ரின் மற்றும் அருண் ஆகியோர் இணைந்து ஒரு கண்வர்ட்டரை உருவாக்கினர். அந்த கண்வர்ட்டரின் உதவியால் 14 வால்ட் மின்சாரத்தை 1,400 வால்ட்டாக மேம்படுத்தினோம். எங்களது இந்த கண்டுபிடிப்புக்கு மாவட்ட அளவிலான போட்டியில் முதல் பரிசு வழங்கப்பட்டது" என தனது அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றி பகிர்ந்தார்.

இராணுவத்தில் பாரா-ரெஜிமண்ட் சிறப்பு படையில் அதிகாரியாக பணியாற்றுவதே தனது லட்சியம் என கூறிய டேவிட், தற்போதிலிருந்தே எஸ்.எஸ்.டி தேர்வுக்கு தயாராகி வருவதாக தெரிவித்தார்.