கதித்தமலை வெற்றிவேலாயுத சுவாமி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்
ஊத்துக்குளியில் உள்ள கதித்தமலை வெற்றிவேலாயுத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூசத் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழா கணபதி ஹோமத்துடன் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமி திருவீதியுலா நடைபெற்று வந்தது.பிப்ரவரி 10ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கீழ்த்தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, காலை 5 மணிக்கு மகா அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, காலை 6.30 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல் நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரோட்டத்தில் பங்கேற்றனா். இந்தத் தேரானது முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மாலை 6 மணி அளவில் தோ்நிலைத் திடலை வந்தடைந்தது.
இதைத் தொடா்ந்து, பிப்ரவரி 14ஆம் தேதி மலைத் தேரோட்டம் நடைபெறுகிறது. பிப்ரவரி 15ஆம் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீருடன் தைப்பூசத் தோ்த் திருவிழா நிறைவடைகிறது.
இதேபோன்று, திருப்பூா் மாநகரில் கொங்கணகிரி கந்தப்பெருமான், வாலிபாளையம் கல்யாண சுப்பிரமணியா், நல்லூரை அடுத்த பள்ளக்காட்டுபுதூா் மந்திரகிரி வேலாயுதசுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களிலும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.