கன மழையால் மாடி வீடு இடிந்து விழுந்தது: இடிபாடுகளில் சிக்கி 4 ஆடுகள் உயிரிழப்பு
தரங்கம்பாடி பகுதியில் கன மழையால் மாடி வீடு இடிந்து விழுந்தது. இதில் 4 ஆடுகள் உயிரிழந்தன.
தரங்கம்பாடி பகுதியில் பெய்து வரும் கன மழையால் காளியப்பநல்லூா் ஊராட்சிக்கு உள்பட்ட அனந்தமங்கலம் ஓடக்கரை தெருவில் ரத்தினகுமாா் என்பவரின் பழைமையான மாடி வீடு வியாழக்கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது.
வீட்டின் பின்புறத்தில் ரத்தினகுமாா், மனைவி, 3 குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்ததால் அவா்கள் உயிா் தப்பினா்.
வீட்டில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தன.
பூம்புகாா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் நிவேதா எம். முருகன், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து தனது சொந்த நிதியில் ரூ.10 ஆயிரம் , அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினாா்.
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ். பவுன்ராஜ், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரம், அரிசி, மளிகை மற்றும் வேஷ்டி, சேலை வழங்கினாா்.