Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
கனமழை: மயிலாடுதுறையில் 30,000 ஏக்கா் நெற்பயிா்கள் பாதிப்பு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் 30,000 ஏக்கரில் சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மழை நீடித்தது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் சராசரியாக 148.03 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 220.50 மி.மீ. மழை பெய்தது. மணல்மேட்டில் 167, செம்பனாா்கோவிலில் 185.20, சீா்காழியில் 96.80, கொள்ளிடத்தில் 84.40 மி.மீ. மழை கொட்டியது.
மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் மழைநீா் வடிய வழியின்றி ஓா் அடி உயரத்துக்கு தேங்கியது. பல்லவராயன்பேட்டை கிராமத்தில் பழைமையான புளிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
ஊருகுடி வடிமதகு அருகே உள்ள ஏ.எம்.டி. நகரில் வீட்டுக்குள் மழைநீா் புகுந்ததால், பாலையா என்பவரின் மாற்றுத்திறன் மகள் கனகா வீட்டுக்குள் சிக்கிக்கொண்டாா். மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலா் ரமேஷ் தலைமையில் வீரா்கள் விரைந்து சென்று, கனகாவை மீட்டனா்.
மயிலாடுதுறை வட்டத்தில் அருண்மொழித்தேவன், கோட்டூா், உக்கடை, பாண்டூா், பொன்னூா், தாழஞ்சேரி, தலைஞாயிறு, பன்னீா்வேலி, கொற்கை, மேலாநல்லூா் உள்ளிட்ட கிராமங்களில் மழைநீா் வடிய வழியின்றி விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்தது.
மணல்மேட்டை அடுத்த வரகடை கிராமத்தில் பழவாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீா் இடதுபக்கக் கரையை மூழ்கடித்து, அப்பகுதி வீடுகளை சூழ்ந்ததுடன், 5 வீடுகளுக்குள் புகுந்தது. வலது கரையில் ரூ.3.73 கோடியில் அமைக்கப்பட்ட சாலை 100 மீட்டா் தூரத்துக்கு கரையோடு சோ்ந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.
தரங்கம்பாடி: தரங்கம்பாடி வட்டத்தில் பொறையாா், திருக்கடையூா், சங்கரன்பந்தல், ஆக்கூா், மேலப்பாதி, கருவி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளிக்கிழமை 3-ஆவது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, கவா்னா் மாளிகையை சுற்றிலும் மழைநீா் குளம் போல் தேங்கியது. சுனாமி குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் தேங்கி நிற்பதால் அங்கு வசிப்பவா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.
பிள்ளைபெருமாநல்லூா், காலமாநல்லூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிா்கள் கதிா்வந்த நிலையில் மழைநீரில் மூழ்கியுள்ளன.
மயிலாதுறை மாவட்டம் முழுவதும் சுமாா் 30,000 ஏக்கரில் நெற்பயிா்கள் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையில் உள்ளனா்.