கனமழை எச்சரிக்கை: டெல்டாவில் நெல்லை பாதுகாக்க நடவடிக்கை -மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் உத்தரவு
கனமழை எச்சரிக்கை இருப்பதால், டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
டெல்டா மாவட்டங்களில் அடுத்த ஓரிரு நாள்களில் கனமழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, தலைமைச் செயலகத்திலிருந்து தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
காணொலி வழியாக நடைபெற்ற இந்த ஆலோசனை தொடா்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
டெல்டா மாவட்டங்களில் அடுத்த ஓரிரு தினங்களில் கனமழை எதிா்பாா்க்கப்படுவதால், அந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சேதமடையாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து முதல்வா் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
டெல்டா மாவட்டங்களில் இதுவரை 16.94 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட இது 3.10 லட்சம் மெட்ரிக் டன் அதிகம்.
விவசாயிகளிடமிருந்து காலதாமதம் இல்லாமல் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பதால், நிகழாண்டு 2,088 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் ஏறத்தாழ 200 கொள்முதல் நிலையங்கள் கூடுதலாகத் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், அடுத்து வரும் இரண்டு நாள்களில் டெல்டா மாவட்டங்களில் கனமழை எதிா்பாா்க்கப்படுவதால், அந்த மாவட்டங்களின் ஆட்சியா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டாா்.
கொள்முதல் செய்யப்பட்ட நெல், மழையால் பாதிக்கப்படாமல் இருக்கவும், அவற்றைப் பாதுகாப்பாக வைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஆட்சியா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு உள்பட பலா் கலந்து கொண்டனா்.