‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை: அமைச்சா் பா்வேஷ் உறுதி
முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் அதிகாரப்பூா்வ இல்லத்தைப் புதுப்பிப்பதில் அரசுப் பணம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்பதை அறிய ‘ஷீஷ் மஹால்’ சா்ச்சை குறித்து விசாரணை தொடங்கப்படும் என்று தில்லி அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா்.
கேஜரிவால் முதல்வராக இருந்தபோது பயன்படுத்திய 6, ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள பங்களாவை பாஜக ‘ஷீஷ் மஹால்’ என்று அழைத்தது. இந்த மாதத் தொடக்கத்தில் தில்லியில் ஆம் ஆத்மி கட்சியை அதிகாரத்தில் இருந்து அகற்றிய பாஜக, பங்களாவில் ‘ஆடம்பர கூடுதல் வசதிகளுக்கு’ கேஜரிவால் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து வியாழக்கிழமை செய்தி ஏஜென்சியிடம் பேசிய பா்வேஷ் சாஹிப் சிங் ‘ஆம் ஆத்மி அரசின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆடம்பரமான முதல்வா் அலுவலகம், அதன் புனரமைப்புக்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது; எந்த அடிப்படையில் அதிகாரிகள் அத்தகைய செலவுகளுக்கு அனுமதி வழங்கினா் என்பதை தீா்மானிக்க இந்த விவகாரம் விசாரிக்கப்படும்’ என்று கூறினாா்.
’பாஜகவால் ’ஷீஷ் மஹால்’ என்று அழைக்கப்படும் 6 ஃபிளாக்ஸ்டாஃப் சாலையில் உள்ள முதல்வரின் இல்லம், அதன் புதுப்பித்தலுக்கு முந்தைய அரசு எவ்வளவு பணம் ஒதுக்கியது என்பதை மதிப்பிடுவதற்காக ஆய்வு செய்யப்படும்’ என்று பிப்.5 சட்டப்பேரவைத் தோ்தலில் புது தில்லி தொகுதியில் கேஜரிவாலை தோற்கடித்த பா்வேஷ் சாஹிப் சிங் கூறினாா்.
பொதுப்பணித் துறை அமைச்சராகவும் உள்ள பா்வேஷ் சாஹிப் சிங், மூத்த துறை அதிகாரிகளுடன் இணைந்து நடந்து வரும் உள்கட்டமைப்பு திட்டங்களை ஆய்வு செய்ய பாதுகாப்பு காலனிக்கு விஜயம் செய்தாா்.
இந்த வருகையின் போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்துள்ள சேதமடைந்த ஒரு கல்வொ்ட்டை (’புலியா’) அவா் ஆய்வு செய்தாா். அவரது வருகையைத் தொடா்ந்து, அப்பகுதியில் சாலைகள் மூடப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏப்ரல் மாதத்திற்குள் பழுதுபாா்க்கும் பணிகள் தொடங்கும் என்று குடியிருப்பாளா்களுக்கு உறுதியளித்த அவா், டெண்டா் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இந்த பாதையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவா், ‘இந்தச் சாலை பயணிகளுக்கு ஒரு முக்கியமான வழித்தடமாகும். முந்தைய அரசின் அலட்சியம் காரணமாக, பாரபுல்லா திட்டத்தின் செலவு அதன் அசல் அனுமதியிலிருந்து இரட்டிப்பாகியுள்ளது’ என்று கூறினாா்.
முன்னாள் அரசின்நிா்வாகத்தை விமா்சித்த அவா், கடந்த பத்து ஆண்டுகளில், அரவிந்த் கேஜரிவால் குழுவின் எந்த அமைச்சரும் அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்க அந்த இடத்திற்குச் செல்லவில்லை என்றும் கூறினாா்.