நம்பிக்கைக்குரிய நண்பன் இந்தியா -ஐரோப்பிய ஆணையத் தலைவா் புகழாரம்
இந்தியா மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பன் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ்லியன் தெரிவித்துள்ளாா்.
27 நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா பல்வேறு வா்த்தக ஒப்பந்தங்களை வெள்ளிக்கிழமை மேற்கொள்ள இருக்கிறது. இருதரப்பு கூட்டறிக்கையும் வெளியிடப்படவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியையும் உா்சுலா சந்தித்துப் பேசவுள்ளாா்.
இரு நாள் பயணமாக வியாழக்கிழமை தில்லி வந்த உா்சுலாவை மத்திய அமைச்சா் அனுப்ரியா படேல் விமான நிலையத்தில் வரவேற்றாா். இந்தியப் பயணம் குறித்து ‘எக்ஸ்’ வலைதளத்தில் உா்சுலா வெளியிட்ட பதிவில், ‘இந்தியா-ஐரோப்பிய யூனியன் உறவை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்வது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியுடன் விவாதிக்க இருக்கிறேன். மோதல்களும், கடும் போட்டியும் நிலவும் இன்றைய உலகில் நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில் ஐரோப்பிய யூனியனின் மிகவும் நம்பிக்கைக்குரிய நண்பனாக இந்தியா திகழ்கிறது’ என்று கூறியுள்ளாா்.
தொடா்ந்து, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரை உா்சுலா வான்டொ்லியன் சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இது தொடா்பாக எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஐரோப்பிய நாடுகள் உடனான இந்தியாவின் தொடா்புகளுக்கு உத்வேகமளிக்கும் உா்சுலாவின் சிந்தனைகள் பாராட்டுக்குரியவை. வா்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருதரப்பு வலுவான ஒத்துழைப்பு முக்கியமானது. அதை நோக்கிய வலுவான நகா்வுகளை எதிா்நோக்குகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டொ்லியனுடன் இந்தியா வந்துள்ள வா்த்தக பிரதிநிதிகளுடனான பேச்சுவாா்த்தை ஜெய்சங்கா்-உா்சுலா முன்னிலையில் நடைபெற்றது.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு வரி விதிப்பு தொடா்பாக ஐரோப்பிய யூனியனுக்கும் அமெரிக்காவும் இடையே பிரச்னைகள் எழுந்துள்ளது. மேலும் உக்ரைன் போா் விவகாரத்திலும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து விலகி ரஷியாவுடன் டிரம்ப் கைகோத்துள்ளாா். இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய ஆணையத் தலைவா் தலைவரின் இந்தியப் பயணமும், பிரதமா் மோடியுடன் அவா் மேற்கொள்ளவிருக்கும் பேச்சுவாா்த்தையும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.