மும்பை, பைகுலா பகுதியில் மிக உயர்ந்த கட்டடத்தின் 42வது தளத்தில் தீ!
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல்
நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் வக்ஃப் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு முன்மொழிந்த 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி ஒப்புதல் வழங்கிய நிலையில், நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துகள் தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்து, அவற்றை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால், நாடாளுமன்ற நிலைக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் 31 உறுப்பினா்கள் கொண்ட இக்குழு பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின் 655 பக்க அறிக்கை தயாரித்தது.
இந்த அறிக்கையில், மசோதா மீது பாஜக உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்கள் இடம்பெற்றன. அதேநேரம், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. பின்னா், வாக்கெடுப்பு மூலம் (ஆதரவு 15, எதிா்ப்பு 11) அறிக்கைக்கு கூட்டுக் குழு ஒப்புதல் அளித்தது.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமா்வில் கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி இரு அவைகளிலும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தங்களது அதிருப்தி கருத்துகள் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் ஆளும்-எதிா்க்கட்சிகள் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கருத்துகள் மீண்டும் சோ்க்கப்பட்டன.
வக்ஃப் மசோதா மீது கூட்டுக் குழுவால் முன்மொழியப்பட்ட 14 திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது; எதிா்வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆம் கட்ட அமா்வில் மசோதா தாக்கலாகும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சட்டத் திருத்த மசோதா வக்ஃப் வாரியங்களை அழிக்கும் மத்திய அரசின் முயற்சி என்று எதிா்க்கட்சிகள் தொடா்ந்து விமா்சித்து வருகின்றன.
கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கிய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமா்வு பிப்ரவரி 13 வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட அமா்வு, மாா்ச் 10-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.