கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு, வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளதாக, வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சட்டத்தின்படி முன்னாள் துணை அதிபருக்கு, பாரம்பரியமாக ரகசிய சேவை பிரிவின் (சீக்ரெட் சர்வீஸ்) பாதுகாப்பு பதவியில் இருந்து விலகிய ஆறு மாதங்கள் வரை வழங்கப்படும்.
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தனது ஆட்சியின் முடிவில், அப்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு வழங்கப்படும் ரகசிய சேவை பிரிவின் பாதுகாப்பை கூடுதலாக 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், நிகழாண்டின் (2025) ஜனவரி மாதம் பதவி விலகிய முன்னள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட இந்தப் பாதுகாப்பானது ஜூலையில் காலாவதியானதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் துணை அதிபரான கமலா ஹாரிஸுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ரகசிய பாதுகாப்பை, தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (ஆக.28) ரத்து செய்து உத்தரவிட்டதாக, அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, அமெரிக்காவில் கடந்த 2008-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி பதவிக்காலம் முடிந்த 6 மாதங்கள் வரை துணை அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரகசிய சேவையின் பாதுகாப்பு அளிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பதவி விலகிய பின்னரும் முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ரகசிய சேவையின் பாதுகாப்பை தங்களது வாழ்நாள் முழுவதும் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இலங்கையில் மேலும் 2 முக்கிய அரசியல் தலைவர்கள் கைது!